நஞ்சில்லாத உணவுப் பொருளை உற்பத்தி செய்வைதன் மூலம் பாதுகாப்பான உணவை பெறலாம். எனவே விவசாயிகள் தங்களது நிலங்களில், அரசால் பரிந்துரைக்கப்பட்ட ரசாயன பூச்சிக்கொல்லிகளை மட்டும் பயன்படுத்தினால் சாகுபடி செலவு குறையும் என ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மைய அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
மத்திய பயிர் பாதுகாப்பு மையம் மூலம் விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இதில் காலத்துடன் விதைப்பு செய்தல், விதைகள் பயன்பாட்டு வீதம், பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகள் போன்ற பயிர் செலவின குறைப்பு நடவடிக்கைகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாது மேம்படுத்தப்பட்ட விதைகள், பயிர் பாதுகாப்பு மருந்துகள், ஒருங்கிணைந்த பூச்சிக்கொல்லி மேலாண்மைக்கான உயிரி பூச்சிக் கொல்லிகள், மண் மேம்பாட்டு பொருட்கள் போன்றவற்றை மாநில அரசு மூலம் விநியோகத்து வருகிறது. விவசாயிகள் அரசு இலவசமாக வழங்கும் டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி, இயற்கை இரை விழுங்கிகளான நெரவிடு நாவாய் பூச்சி, பச்சைக் கண்ணாடி இறக்கைப் பூச்சி, உயிரிப் பூஞ்சானக் கொல்லிகளான மெட்டாரைசியம், பவேரியா, ஐசேரியா, டிரைக்கோடா்மா போன்றவை பயன்படுத்துமாறு ஆலோசனை கூறினர்.
விவசாயிகள் கூடுமானவரை உயிரிப் பூச்சிக்கொல்லிகள், இயற்கை பூச்சி விரட்டிகளை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் எனவும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில், ரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர். பரிந்துரைக்கப்பட்ட ரசாயன பூச்சிக்கொல்லிகளை, பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என, விவசாயிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்கள்.