வெங்காயத்தின் விலை உயர்ந்ததை தொடர்ந்து பெரும்பாலான விவசாயிகள் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய, மாநில அரசும் வெங்காய சாகுபடியை உயர்த்துவதற்கு மானிய விலையில் விதைகளை வழங்குகிறது.
தேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமங்களில் விவசாயிகள் நீண்ட கால பயிர்களுக்கிடையில், குறுகிய கால பயிர்களான வெண்டை, தட்டைப்பயிர், சின்ன வெங்காயம், கத்தரிக்காய் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நடவு செய்து 90 நாளில் பலன் தர கூடிய குறுகிய கால பயிரான மிளகாய் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பெரியகுளம் சுற்றியுள்ள பகுதிகளான குள்ளப்புரம், சங்கரமூர்த்தி பட்டி, முதலக்கம்பட்டி மருகால்பட்டி, கிராமங்களில் அதிக பரப்பளவில் மிளகாய் சாகுபடி நடை பெற்று வருகிறது.
மூன்று மாதங்களில் மிளகாய் அறுவடைக்கு தயாராகி விடுவதால், ஊடுபயிராக 45 நாளில் பலன் தரக்கூடிய சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்துள்ளனர். மிளகாய் பலனுக்கு வருவதற்குள் சின்ன வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு விடும் என்பதால் கூடுதல் வருவாய் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.