கம்பம் பள்ளதாக்கு விவசாயிகள் செண்டுமல்லியின் அமோக விளைச்சலால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனிமாவட்டம், கம்பம் சுற்றியுள்ள கிராமங்களில் வாழை, திராட்சை, தென்னை மற்றும் பீட்ரூட் முள்ளங்கி, நூக்கல் போன்ற காய்கறிகளை பயிர்செய்து வருகின்றனர். காய்கறிகள் மற்றும் பழங்கள் வளர்வதற்கான ஏற்ற சூழ்நிலை நிலவுவதால், முல்லைப் பெரியாறு நீர் மற்றும் கிணற்று நீர்பாசனம் மூலம் போதிய நீர் கிடைப்பதாலும் அங்குள்ள பெரும்பாலான மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வறட்சியை தாங்கி குறைந்த நீர் பாசனத்தில் செழித்து வளர கூடிய பூக்களில் செண்டு மல்லி முதன்மையானது ஆகும். எனவே பெரும்பாலான விவசாயிகள் செண்டுமல்லியை தனிப்பயிராகவும், ஊடு பயிராகவும் சாகுபடி செய்து லாபம் ஈட்டி வருகிறார்கள். தற்போது கூடலூர், ஆங்கூர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செண்டு மல்லி சாகுபடி செய்து வருகிறார்கள்.
வாழைக்கன்றுகளின் இடையில் செண்டு மல்லி பூ ஊடுபயிராக பயிரிடுவதினால் விவசாயிகளுக்கு பல்வேறு பயன்கள் கிடைக்கிறது. முதலில் கிழங்குகளில் ஓட்டையிடும் நூற்புழு தாக்குதலை கட்டுப்படுத்த முடியும். அதுமட்டுமல்லாது பாசனத்தில் உபரி நீரை பயனுள்ளதாக மாற்ற, ஊடுபயிர்களை சாகுபடி செய்யலாம். உபரி வருமானத்தில் ஆண்டுபயிரான வாழைக்கு உரமிடுதல், களை வெட்டுதல் உள்ளிட்ட செலவுகளை ஈடுகட்டமுடியும். நடவு செய்யப்பட்ட அறுபது நாட்களில் செண்டு மல்லி பூ பிடித்து விடுகிறது. பின்னர் நூறு நாட்கள் வரை தொடர்ந்து பலன் கொடுக்கிறது. அக்டோபர் மாதம் நடவு செய்யப்பட்ட செண்டு மல்லி பூ தற்போது அறுவடை செய்து கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.