சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளு மன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் பெண் எம்பி, கத்திரிக்காயை பச்சையாக கடித்து காட்டியது, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
மழைக்கால கூட்டத்தொடர்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. எதிர்கட்சிகளின் அமளியுடன் , கடந்த இரண்டு வாரங்களாக நீடித்து வரும் நிலையில் நேற்று விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடந்தது.
ஒத்திவைப்பு
தொடக்கம் முதல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை விமர்சித்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் கூடிய நிலையில், அமளி ஓயாததால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
விவாதம்
இந்நிலையில் நேற்று நடந்த விவாதத்தின் போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி 'ககோலி கோஷ் தஸ்திதர் பேச துவங்கினார். அவர் பேசுகையில், கடந்த சில மாதங்களில் வீட்டு பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.600லிருந்து இப்போது ரூ.1,100 ஆக அதிகரித்துவிட்டது. கடந்த ஓராண்டில் 8வது முறை உயர்த்தப்பட்டுள்ளது.
பச்சையாக சாப்பிட
இப்படியே விலை ஏறி கொண்டே போனால், காய்கறிகளை பச்சை சாப்பிட வேண்டும் என இந்த அரசு வலியுறுத்துகிறதா என்றார். பின் திடீரென ஒரு கத்திரிக்காயை எடுத்து கடித்து காண்பித்தார். அவரது செயல் சக எம்.பிக்கள் மட்டுமல்லாது பிஜேபி எம்.பிக்களிடையேயும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
நாட்டு மக்களின் நிலையைக் கருத்தில்கொள்ளாமல், 400 ரூபாயாக இருந்த சமையல் சிலிண்டர் விலையை 1,000 ரூபாய்க்கு மேல் உயர்த்திய மத்திய அரசுக்கு இப்படித்தான் கண்டனங்களைத் தெரிக்க இயலும்.
மேலும் படிக்க...