மரங்களின் தாய் மரம் என்று அழைக்கப்படும் அத்தி மரங்களில் தற்போது சீசன் துவங்கியுள்ளதால், மரங்களில் எல்லாம் கொத்து, கொத்தாக அத்தி காய்கள் காய்த்துள்ளன. நீலகிரி மாவட்டத்தில் அத்தி மரங்கள் அதிக அளவு காணப்படுவதால் பழங்களின் வரத்து மேலும் அதிகரிக்கும் என குன்னுர் தோட்டக்கலை துறையினர் தெரிவித்துள்ளனர்.
பல்லுயிர் பெருக்கத்திற்கு முக்கிய பங்காற்றும் மரங்களில் அத்தி மரம் முதன்மையானது. மரத்தின் பழங்கள் பறவையினங்கள், வனவிலங்குகளுக்கு ஊட்ட சத்து மிகுந்த உணவாகும். அதுமட்டுமில்லாமல் இதன் நுனி முதல் வேர் வரை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. பழத்தின் சுவையை பொறுத்தவரை துவர்ப்பும் இனிப்பும் கொண்டது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அதிகளவில் காணப்படும் இப்பழம் ஜனவரி மாதங்களில் அதிகம் கிடைக்கும். இதில் சீமை, நாட்டு, வெள்ளை என பல்வேறு வகைகள் உள்ளன. தோராயமாக ஒரு மரத்தில் இருந்து 150 முதல் 360 கிலோ வரை கிடைக்கும். அத்திப்பழத்தை நேரடியாகவோ, தேனில் ஊற வைத்தோ, உலர்த்திப் பொடி செய்தோ சாப்பிட்டு வந்தால் பல்வேறு பயன்கள் கிடைக்கும்.