தஞ்சாவூர் மாவட்டதில் உள்ள அதிராம்பட்டினம் கடலோரப்பகுதிகளில் வரிமட்டி சீசன் துவங்கி உள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நத்தை இனத்தின் ஒருவகை மட்டி இனம். இதில் வரி மட்டி, வழுக்கு மட்டிகள் என இருவகைகள் உள்ளன. இவை பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டிருப்பதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள்.
பொதுவாக வரிமட்டியை வலை போட்டு பிடிக்க இயலாது. அவை சேற்றில் புதைந்து வாழும் தன்மை கொண்டது என்பதால் மீனவர்கள் அரிவலை கொண்டு குறைந்த ஆழம் உள்ள தண்ணீரில் மூழ்கி பிடிக்கின்றனர். அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் ஆகிய கடலோர கிராமப் பகுதிகளில் உள்ள மீனவப் பெண்கள் காலை நேரங்களில் மட்டிகளை வாங்கி அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த வரிமட்டியின் கறி ரூ 200 முதல் ரூ 300 வரை விற்பனை செய்யபடுகிறது. வரிமட்டியின் கறி ஓட்டுடன் கிலோ 50 ரூபாய் அளவில் விற்கப்படுகிறது. மேலும் இதன் ஓடுகள் அழகு சாதனப் பொருட்கள், வர்ணம் பூச்சுகள் தயாரிக்க பயன்படுவதால் தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களுக்கும் தரம் பிரித்து அனுப்பப்படுகிறது. குறிப்பாக ராமேஸ்வரம், கல்கத்தா, பெங்களூர், ஆகிய பகுதிகளுக்கு வரிமட்டியின் ஓடுகள் கிலோ ரூ.100 வரை விற்கப்படுகிறது.