மீன்பிடித் தடைக்காலம் தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ள நிலையில், மீனவர்கள் தங்களது படகுகளை கரையோரங்களில் நிறுத்தியுள்ளார்கள். தமிழ்நாட்டினை பொறுத்த வரை ஏப்ரல் மத்தியில் தொடங்கி ஜூன் மாதம் வரை, ஆழ்கடலிலுள்ள மீன்கள் முட்டையிட்டு, குஞ்சு பொரித்து, இனப்பெருக்கம் செய்து மீன்வளம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக மீன்பிடித் தடைக்காலம் கடைப்பிடிக்கப்படுகிறது என வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திர சேகரன் தெரிவித்துள்ளார்.
வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக்.ஜலசந்தி போன்ற பகுதியில் உள்ள ஆழ்கடலில், இந்த காலக்கட்டத்தில் தான் மீன்களின் இனப்பெருக்கம் நடைபெறுவதாக மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் கண்டறிந்து உள்ளது. இதை அப்படியே பின்பற்றி தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் 1983-ன் கீழ் தமிழக கடலோர மாவட்டங்களில் மீன்பிடித் தடைகாலம் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மொத்தம் 61 நாட்களுக்கு அமல்படுத்தப்படுகிறது எனத் தெரிவித்த அக்ரி சு.சந்திர சேகரன் மீன்பிடித் தடைகாலம் தொடர்பாக பல்வேறு தகவல்களை நம்முடன் பகிர்ந்துள்ளார். அவற்றின் முழு விவரம் பின்வருமாறு-
இந்த தடை எந்தெந்த மாவட்டத்திற்கு பொருந்தும்?
மீன்பிடித் தடைக்காலம் தமிழகத்திலுள்ள 14 கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி , தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பொருந்தும்.
தடைக்காலத்தில் மீன்பிடிக்கக் கூடாதா?
இந்த தடைக்காலத்தில் விசைபடகு மூலமாக ஆழ்கடல் பகுதியில் கண்டிப்பாக மீன் பிடிக்கக்கூடாது. அதே சமயத்தில் வல்லம், கட்டுமரம், பைபர் படகு மூலமாக மீனவர்கள் கரையோரத்தில் மீன்பிடிக்க அனுமதிக்கப் படுகிறார்கள்.
இந்த தடைக்காலம் ஏன்?
குறிப்பிட்ட இந்த கால இடைவெளியில் தான் ஆழ்கடலிலுள்ள மீன்கள் பாறையின் இடுக்குகளில் முட்டையிட்டு, குஞ்சு பொறித்து மீன்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். இந்த நேரத்தில் விசை படகுகள் ஆழ்கடலில் சென்றால் படகு மற்றும் மீன்பிடி வலைகளினால் மீன் குஞ்சுகள் அடிபட்டு மீன்வளம் குறையும் நிலை ஏற்படும்.
இதனால் தான் மீனவர்களும் மீன்பிடித் தடைக்காலத்தை தவறாது கடைப்பிடித்து வருகிறார்கள். இந்த காலத்தில் தங்களுடைய படகுகளில் பராமரிப்பு பணி மேற்கொள்வது, மீன்வலைகளை சரி செய்வது போன்ற பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட சுமார் 15000 விசைபடகுகள், ஆழ்கடலுக்கு செல்லாது கரையோரம் மற்றும் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருக்கும்.
மீனவர்களுக்கு நிவாரணத் தொகை:
தமிழக அரசு மீனவர்களின் வாழ்வாதாரம் மீன்பிடித் தடைக்காலத்தில் பாதிக்கக்கூடாது என்கிற எண்ணத்தில் மாத நிவாரண தொகையாக ரூ.6000 வழங்குகிறது. மீன்பிடித் தடைக்காலத்தினால் மீன்களின் வரத்து சந்தைகளில் வெகுவாக குறையும். இதனால் மற்ற நாட்களுடன் ஒப்பிடுகையில் விலை சற்று கூடுதலாக இருக்கும்.
இதுப்போன்ற சூழ்நிலைகளில் உள்நாட்டு மீன்வளர்ப்போரிடம் மீன்கள் வாங்கலாம். தற்போது IN LAND FISH CULTURE பரவலாக அதிகரித்துள்ளது அனைவரும் அறிந்ததே என்று அருப்புக்கோட்டையினை சேர்ந்த வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திர சேகரன் தெரிவித்துள்ளார்.
Read more:
பாஜக தேர்தல் அறிக்கை: விவசாயிகளுக்கு மோடியின் கியாரண்டி என்ன?
விவசாயம்.. காளான் வளர்ப்பில் 100 நாள் திட்ட பணியாளர்கள்- வருமானம் ஈட்டி அசத்தும் தட்டட்டி ஊராட்சி