பொதுவாக பருவநிலை மாறும் போது கோழிகளுக்கு கழிச்சல் நோய் ஏற்படுகிறது. இந்த நோயானது ஒரு வித வைரஸின் மூலமாக பரவுகிறது. பனிக்காலத்தில் இருந்து வெயில் காலம் துவங்கும் பிப்ரவரி மற்றும் கோடை காலத்தில் இருந்து மழை காலம் துவங்கும் ஜூன், ஜூலை போன்ற மாதங்களில் கழிச்சல் நோய் தோன்றுவது வழக்கம். இவ்வகை நோய்களை ஆரம்பத்திலே கண்டறிந்து அதற்கான மருந்தை கொடுக்கும் போது கோழியின் இறப்பை தவிர்க்க இயலும். அந்த வகையில் பெரம்பலூர் ஆட்சியர் கழிச்சல் நோய் தடுப்பு முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.
கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயனடையும் வகையில் பெரம்பலூர் கால்நடை பராமரிப்புத்துறை ஆண்டுதோறும் பிப்ரவரி 2வது வாரத்தில் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம் நடத்தி வருகிறது. இவ்வாண்டும் வருகிற 9ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து கோழிகளுக்கும் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசியை இலவசமாக போட்டுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களில் நடைபெறவுள்ளது. எனவே அனைத்து கோழி வளர்ப்போர், மற்றும் விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களின் கோழிகளை கழிச்சல் நோயிலிருந்து பாதுகாக்கும் படி கேட்டுக் கொண்டார்.