வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு, 'சிலிண்டர்' விலை, இன்று (ஆகஸ்ட் 17) முதல், 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் மாற்றம் ஏற்படுகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினசரியும், சமையல் எரிவாயு சிலிண்டரின் (Gas) விலை, மாதத்தில் ஒரு முறை அல்லது இருமுறை மாற்றம் செய்யப்படுகின்றன. வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைக் கொண்ட சிலிண்டர் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி 610 ரூபாயாக இருந்தது. அதன்பிறகு, படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது.
விலை உயர்வு
இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 உயர்த்தப்படுவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் கடந்த மாதம் ரூ.850.50 விலையில் விற்பனையான சமையல் எரிவாயு சிலிண்டர், இன்று முதல் ரூ.875.50 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் வணிக ரீதியான எரிவாயு சிலிண்டர் ரூ.1,756க்கு விற்பனை (Sale) செய்யப்படுகிறது. இதனால், இல்லத்தரசிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.
கடந்த 6 மாதங்களில் சமையல் எரிவாயு விலை 710 ரூபாயிலிருந்து ரூ.165, அதாவது 23% உயர்த்தப்பட்டிருக்கிறது. சமையல் எரிவாயு என்ற அத்தியாவசியப் பொருளின் விலையை ஆண்டுக்கு 46% என்ற அளவுக்கு உயர்த்துவது நியாயமா? என எண்ணெய் நிறுவனங்கள் சிந்திக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “சமையல் எரிவாயு விலையை குறைக்கும் படி எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும்; தமிழக அரசும் அதன் பங்குக்கு ரூ.100 மானியம் வழங்கி சமையல் எரிவாயு விலையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க
தடுப்பூசியை கலந்து போடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு!
தங்கத்தில் முதலீடு செய்ய சிறந்த வழி எதுவென அறிந்து கொள்ளுங்கள்!