பண்டை காலங்களில் மக்கள் சிறுதானிய உணவுவகைகளை உண்டு ஆரோக்கிய வாழ்வை மேற்கொண்டனர். இன்றைய நவீன உலகில் மக்கள் பலரும் பல்வேறு உடல் உபாதைகளை சந்தித்து வருகின்றனர். சிறுதானியங்களை உண்பதன் மூலம் ஆரோக்கிய வாழ்வை பெற இயலும் என்பதை அனைவரும் உணர தொடங்கி விட்டனர். இதன் காரணமாக அரசும் சிறுதானிய உற்பத்தியை பெருக்குவதற்கு விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருகிறது.
சோளம், ராகி, கம்பு, திணை, வரகு, சாமை, குதிரைவாலி உள்ளிட்ட சிறு தானியங்கள் வறட்சியை தாங்கி வளரும் என்பதால் சிறுதானியங்களை அதிக அளவில் பயிரிட வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கி வருகின்றனர். அதுமட்டுமல்லாது, சிறுதானிய நுண்ணூட்ட உரம் மானிய விலையில் வழங்கி வருகின்றனர்.
அதன்படி, பொள்ளாச்சி மாவட்ட விவசாயிகள் சிறுதானிய பயிர்களுக்கான நுண்ணூட்ட உரங்களை மானிய விலையில் வழங்குகின்றனர். ரூ.74.91 மதிப்பிலான ஒரு கிலோ உரம், மானிய விலையில் ரூ.33.44க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் விளைச்சலை அதிகப்படுத்த உதவும் என்பதால் விவசாயிகள் வாங்கி பயன்பெறலாம் என பொள்ளாச்சி தெற்கு வேளாண் துறை, உதவி இயக்குனர் நாகபசுபதி தெரிவத்துள்ளார்.