புதிதாக நுண்ணீர் பாசன குழாய்கள் அமைக்கும் விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியம் அளிக்கப்படும் என வேளாண் துணை இயக்குனர் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் சிறு, குறு மற்றும் பெரிய விவசாயிகள் என அனைவரும் பயன் பெறலாம்.
கோவை மாவட்டத்தில், ரூ.450 கோடி செலவில் 7000 ஏக்கர் பரப்பளவிற்கு நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், குறைந்த நீர்பாசனத்தில் அதிக பயிர்களை விளைவிக்க இயலும். மேலும் நீரில் கரையும் ரசாயன உரங்களை நீரில் கலந்து இடுவதால் 70 சதவீதம் வரை நீர் சேமிக்க முடியும். அத்துடன் தண்ணீர் பாய்ச்சுவதற்கான கூலியாட்கள் தேவையில்லை, குறைந்த நீர்பாசனத்தில் அதிக மகசூல் மற்றும் அதிக லாபம் பெற முடியும்.
சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்கலாம். நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் பின்வரும் ஆவணங்களுடன் அந்தந்த, வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளவும்.
- நிலவரைபடம்
- கூட்டு வரைபடம்
- ஆதார் அட்டை
- சிட்டா
- ரேஷன் கார்டு
- நீர் மற்றும் மண் பரிசோதனை சான்று
- சிறு, குறு விவசாயி சான்று