தென்தமிழக கடலோரப்பகுதிகளில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. ராமநாதபுரத்தில் நேற்று கனமழை கொட்டித்தீர்த்தது. இதுவரை இல்லாத அளவிற்கு ராமேஸ்வரம் பகுதியில் 44 செ.மீ, தங்கச்சிமடம் பகுதியில் 34 செ.மீ என கனமழை பெய்த நிலையில் இன்றும் 13 மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று (21-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியது. இதன் காரணமாக, வருகின்ற 23-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதனடிப்படையில் கனமழைக்கான வாய்ப்புள்ள மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு:
21-11-2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
22-11-2024 முதல் 24-11-2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
25-11-2024: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
26-11-2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
27-11-2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகள், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் செல்ல எண்ணியிருக்கும் மீனவர்களுக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ள நிலையில் வானிலைத் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு mausam.imd.gov.in/chennai என்கிற இணையதளத்தை காண அறிவுறுத்தப்படுகிறது.
Read more:
Puthina cultivation: ஜப்பான் புதினா சாகுபடி குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியவை?
20 சதவீத ஏக்கருக்கு மட்டுமே பயிர் காப்பீடு- விவசாயிகளுக்காக தேதி நீட்டிப்பு!