கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் பகுதி விவசாயிகள் மரவள்ளியில் ஊடுபயிராக சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்து வருமானம் ஈட்டி வருகிறார்கள். பத்து மாத கால பயிரான மரவள்ளியின் இடையில், குறுகிய கால பயிரான சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்வதன் மூலம் கணிசமான லாபம் பெறலாம் என்கிறார்கள் அப்பகுதி விவசாயிகள்.
மரவள்ளியை பொறுத்தவரை சமவெளி பகுதிகளிலும், மலைப் பிரதேசங்களிலும் சாகுபடி செய்கின்றனர். மலைப் பிரதேசங்களில் மானாவாரியில் அதாவது ஜூன் மற்றும் ஜூலை மாதங்களிலும், சமவெளிப்பகுதியில் இறவையில் அதாவது டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடவு செய்யப்படுகிறது.
மரவள்ளி வயலில் ஊடு பயிராக சிறிய வெங்காயம், உளுந்து, பச்சைப்பயறு, மற்றும் கொத்தமல்லி போன்ற குறுகிய காலப் பயிர்களை சாகுபடி செய்யலாம். இவ்வகை பயிர்கள் நடவு செய்த 60-70 நாட்களில் அறுவடை செய்து விடலாம். சிறிய வெங்காயதிற்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கிறது. தற்போது சின்ன வெங்காயம் ரூ.40 ரூபாய் வரை விற்பனையாவதால் கூடுதல் லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.