வீட்டுக் கடன் வசதியை நாடும் போது, வட்டி விகிதத்தை (Interest Rate) அடிப்படையாகக் கொண்டே பெரும்பாலனோர் முடிவு எடுக்கின்றனர். வட்டி விகிதம் முக்கியம் என்றாலும், வீட்டுக் கடன் (House Loan) தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டிய மற்ற அம்சங்களும் இருக்கின்றன.அதிலும் தற்போது குறைந்த வட்டி விகித போக்கு நிலவும் சூழலில், வீட்டுக் கடன் தொடர்புடைய மற்ற அம்சங்களையும் மனதில் கொண்டு செயல்படுவது அவசியம். வங்கிகள் போட்டி போட்டி அளிக்கும் வாய்ப்புகளை பிரித்தறிந்து, தனக்கேற்ற சரியான வீட்டுக் கடன் வசதியை தேர்வு செய்வதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.
கடன் தகுதி:
தற்போது மிகக் குறைந்த வட்டி விகிதம் நிலவுகிறது. பல வங்கிகள், 6.75 சதவீத வட்டியில் இருந்து கடன் அளிக்கின்றன. ஆனால், இந்த குறைந்த வட்டி விகிதம் எல்லாருக்குமானது அல்ல; தகுதி உடையவர்கள் மற்றும் நிபந்தனைகள் பொருந்துபவர்களுக்கு மட்டும் தான். பாலினம், வருமானம், கிரெடிட் ஸ்கோர் (Credit Score), வயது அடிப்படையில் இது அமையலாம்.
எந்த விகிதம்?
கடனுக்கான வட்டி விகிதம் குறைவாக இருக்க காரணம், வட்டி விகிதத்தை தீர்மானிக்கும் ரெப்போ விகிதம் குறைவாக இருப்பது தான். ஆனால், ரெப்போ விகிதம் உயரத் துவங்கினால் கடனுக்கான வட்டியும் உயரும். எனவே, வட்டியை தீர்மானிக்க வங்கிகள் பயன்படுத்தும் அளவுகோளையும், அதன் செயல்பாட்டையும் அறிந்து கொள்வது நல்லது.
இதர கட்டணங்கள்
கடனுக்கான செலவு வட்டி விகிதம் மட்டும் அல்ல; செயல்முறை கட்டணம் (Processing Fees), சட்ட கட்டணம் என பலவிதமான கட்டணங்கள் இருக்கின்றன. இவை வங்கிக்கு வங்கி மாறுபடலாம். மேலும் கடனுக்கான நிபந்தனைகளும் மாறுபடலாம். இவற்றையும் பரிசீலித்து, சாதகமான அம்சங்கள் கொண்ட வாய்ப்பை தேர்வு செய்ய வேண்டும்.
சேவை முக்கியம்:
வீட்டுக் கடன் என்பது நீண்ட கால கடன் பொறுப்பாகும். எனவே, வீட்டுக் கடன் கணக்கு உள்ள வங்கியின் சேவையை கவனிப்பது அவசியம். வாடிக்கையாளர் சேவை, வழிகாட்டுதல், ஆலோசனை அளிப்பது ஆகியவற்றில் சிறந்து விளங்கும் வங்கிகளை நாடுவது நல்லது. ‘டிஜிட்டல்’ (Digital) மயமாக்கலில் முன்னிலை வகிக்கும் வங்கிகள் சிறந்தவை.
அமைவிடம்:
வங்கி கிளையின் அமைவிடத்தையும் கவனிக்க வேண்டும். கிளை அருகாமையில் இருந்தால் சேவை பெறுவது மற்றும் கணக்கை இயக்குவது எளிதாக இருக்கும். ஆனால், வீட்டுக் கடன் நிறுவனங்கள் போன்றவற்றை நாடும் போது, கிளை தொலைவில் இருக்கலாம். இதையும் மனதில் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க
முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: தங்க முதலீடு தரும் புதிய பலன்!