வரவுக்கும், செலவுக்கும் எப்போதும் சரியாக இருக்கும் என்றாலும், பல நேரங்களில் உபரி பணம் கையில் இருப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம். சேமிப்பு, ‘போனஸ்’ அல்லது எதிர்பாராத பண வரவு இதற்கு காரணமாக அமையலாம். உபரி பணம் கையில் இருக்கிறது என்பதற்காக, அதை இஷ்டம் போல செலவு செய்யாமல் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தற்போது நிலையான வருமானம் தரும் முதலீடுகள் குறைந்த பலனை அளித்து வரும் சூழலில், உபரி பணத்தை சரியாக பயன்படுத்திக் கொள்வதற்கான வழிகளை பார்க்கலாம்.
முதலீடு:
உபரி பணத்தை முதலீடு செய்வது ஏற்றதாக இருக்கும். ஆனால் முதலீடு செய்யும் முன், அதன் மூலம் கிடைக்கக் கூடிய பலனை பரிசீலிக்க வேண்டும். தற்போது வைப்பு நிதி போன்றவை குறைந்த பலன் அளிக்கின்றன. எனவே, அதிக பலன் அளிக்கக்கூடிய பாதுகாப்பான முதலீடு வாய்ப்பை தேர்வு செய்வது நல்லது.
அவசர கால நிதி:
வீட்டுக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் பொறுப்புகள் இருந்தால், கடனை அடைக்க உபரித் தொகையை பயன்படுத்த முன்னுரிமை அளிக்கலாம். எனினும், அதற்கு முன் அவசர கால நிதி கையில் இருப்பதையும், போதிய மருத்துவ காப்பீடு இருப்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்
வாகனக் கடன்:
கடனை அடைக்க உபரித் தொகையை பயன்படுத்துவதாக இருந்தால், எந்த வகை கடனை முதலில் அடைப்பது என தீர்மானிக்க வேண்டும். வீட்டுக் கடனை விட வாகனக் கடனுக்கான வட்டி அதிகம் என்பதால், வாகனக் கடனை அடைப்பது நல்லது. இது, தேய்மானம் கொண்ட சொத்து என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
வீட்டுக் கடன்:
பங்கு முதலீடு கொண்டிருப்பவர்கள், சந்தை எழுச்சியில் உள்ள நிலையை பயன்படுத்தி, முதலீட்டில் இருந்து பகுதியளவு லாபம் பெற்று, அந்த தொகையை வீட்டுக் கடனுக்கு முன்பணமாக செலுத்தலாம். வட்டி விகிதம் மிகவும் குறைவாக உள்ள சூழலில் அசலில் ஒரு பகுதியை செலுத்துவது, வட்டி உயரும் நிலையில் உதவும்.
‘கார்டு’ கடன்:
‘கிரெடிட் கார்டு’ வைத்திருப்பவர்கள், நிலுவைத் தொகை இருந்தால் உபரி பணத்தை அதற்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கிரெடிட் கார்டு கடன் சுமையாக மாறும் அபாயம் கொண்டது என்பதால், இந்த கடனை அடைத்துவிடுவது அவசியம். தனிநபர் கடன் இருந்தாலும் அதை அடைத்துவிட வேண்டும்.
மேலும் படிக்க