தமிழகத்தில் காலநிலை மாற்றங்களால் அதிகம் பாதிக்கும் மாவட்டமாக மதுரை இருப்பது இந்திய வானிலை ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆய்வில், மதுரை மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை பொழிவு கடுமையாக குறைய ஆரம்பித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை (SouthWest Monsoon) காலகட்டத்தில் மதுரை, தர்மபுரி மாவட்டங்களில் பெய்கிற மழையின் அளவு குறைந்து வருகிறது. இதில் ஆண்டு சராசரி மழை பொழிவு குறிப்பிடத்தக்க அளவு குறைகின்ற தமிழகத்தின் ஒரே மாவட்டம் மதுரையே. தவிர வறண்ட நாட்களின் எண்ணிக்கையும் மதுரை மாவட்டத்தில் அதிகரிக்கிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை
இதை கருத்திற்கொண்டு நிகழவிருக்கும் ஆபத்தை தடுக்க சில முன்னெடுப்புகளை எடுப்பது அவசியம் என முதல்வர் ஸ்டாலினுக்கு மதுரை எம்.பி., சு. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். அதில், மதுரை மாவட்டத்தின் பசுமை போர்வையை 33 சதவீதமாக அதிகரிக்க சிறப்பு திட்டங்கள் அறிவிக்க வேண்டும். ஏற்கனவே உள்ள காடுகளை வேறு எந்த பயன்பாட்டிற்கும் மாற்றம் செய்யக்கூடாது. அக்காடுகளை பாதுகாக்க சிறப்பு திட்டங்களை அறிவிக்க வேண்டும். எல்லா நீர்நிலைகளையும் போர்க்கால அடிப்படையில் மீட்டுருவாக்கம் செய்து முழுக் கொள்ளளவிற்கு துார்வார வேண்டும்.
வைகையின் பிறப்பிடமான மேற்கு மலைகளை பாதுகாக்க தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். வைகை நதியை ஐந்து மாவட்ட நிர்வாக கட்டுப்பாட்டு பகுதியாக இல்லாமல் ஒற்றை நிர்வாக அலகின் கீழ் கொண்டு வர வேண்டும். மதுரை, தமிழகத்தின் கலாச்சார தலைநகரம். அதன் சூழலை மீட்டுருவாக்கம் செய்வதற்கும், காற்று மாசை (Air Pollution) குறைப்பதற்கும் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
கியாஸ் மானியம் வரவில்லையா: My LPG-யில் புகார் அளிக்கலாம்
குழந்தைகளைத் தாக்கும் புளூ வைரஸ்: விழிப்புடன் இருங்கள்!