பலாப்பழ சீசன் துவங்க உள்ளதால், பழங்கள் தேவைப்படுவோர், கல்லாறு தோட்டக்கலைத்துறை பண்ணையில் வாங்கி செல்லலாம் என தோட்டக்கலைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம், கல்லாற்று மலைகளுக்கு நடுவில் 25 ஏக்கர் பரப்பளவில் அரசின் தோட்டக்கலைத்துறை பண்ணை அமைந்துள்ளது. இங்கு நிலவும் ரம்யமான சூழல் பல்வேறு பழ மரங்களும், வாசனை திரவிய மரங்கள் மற்றும் செடிகள் வளர்வதற்கு ஏதுவாக உள்ளது. இங்கு மங்குஸ்தான், பலா, லிச்சி, ரம்பூட்டான், துரியன் போன்ற அரிய வகை பழங்கள் விளைவிக்கப் படுகின்றன. இங்கு 70-ற்கு மேற்பட்ட பலா மரங்கள் உள்ளன. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் முதல் வாரத்தில் பலாப்பழ சீசன் துவங்கி ஜூன் மாதம் இறுதி வரை இருக்கும். கரோனா தடுப்பு நடவடிக்கையால் தற்போது பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. இங்கு அறுவடை செய்யப்படும் பழங்கள் கிலோ, ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகின்றன. வரும் 15ம் தேதி முதல் பலாப்பழம் அறுவடை செய்யும் பணி துவங்க உள்ளதால் தேவைப்படுபவர்கள், நேரடியாக பண்ணைக்கு வந்து வாங்கி செல்லலாம் என, தோட்டக்கலைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.