வெங்காயம் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து கோயம்பேடு மார்க்கெட் மற்றும் உள்நாட்டு சந்தைகளில் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.50 வரை விற்பனையாகிறது. இதன் விலை பொங்கலுக்கு பிறகு மேலும் குறைய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த ஓரிரு மாதங்களாக வெங்காயத்தின் விலை உட்சத்தில் இருந்து வந்தது. காலம் தவறிய பருவமழையே இதற்கு முக்கிய காரணமாக கூறப் படுகிறது. வெங்காயத்தினை பெருமளவில் சாகுபடி செய்யும் மாநிலங்களின் பட்டியலில் மஹாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்கள் இருந்து வருகின்றன. அங்கு பெய்த கனமழையால், வெங்காயம் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன் எதிரொலியாக வரத்து குறைந்து, நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் முதல் வெங்காயம் விலை படிப்படியாக உயர்ந்து ரூ.200க்கு விற்பனையானது.
வெங்காய விலையை கட்டுப்படுத்த அரசு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இதன் காரணமாக உச்சத்தில் இருந்த வெங்காயம் விலை, தற்போது, படிப்படியாக குறைந்து வருகிறது. அதுமட்டுமல்லாது உள்நாட்டில் இருந்தும் வெங்காயம் விளைச்சல் அதிகரித்துள்ளதால் வரத்து அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வெங்காயம் வந்திருப்பதால் 1 கிலோ வெங்காயம், ரூ.50க்கு விற்பனையாகிறது. தை பிறந்த பிறகு ரூ.20 முதல் 25 ஆக குறைய வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.