பெரும்பாலான விவசாயிகள் குறுகிய கால பயிரை ஊடு பயிராக சாகுபடி செய்கின்றனர். இவற்றின் மூலம் களை கட்டுப்படுவதுடன், கூடுதல் வருவாயும் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். செண்டுமல்லியை ஊடுபயிராக வாழை, கொய்யா போன்ற மரங்களின் இடையில் பயிரிட்டு லாபம் ஈட்டி வருகிறார்கள்.
திருப்பூரில் உள்ள மடத்துக்குளம் அமராவதி ஆயக்கட்டு பகுதிகளில் பலவகை பயிர்களை பயிரிட்டு வருகிறார்கள்.பயிறு வகைகள், காய்கறிகள், பழமரங்கள் போன்றவற்றிற்கு சொட்டுநீர் பாசனம் மூலம் சாகுபடி செய்கின்றனர். இதில், கொய்யா மிக முக்கிய பயிராக விளைவிக்கப் படுகிறது. குறைந்த தண்ணீர், குறைந்த பராமரிப்பு, அதிக வறட்சியைத் தாங்கி வளரும் பயிர்களில் பழப்பயிராக கொய்யா உள்ளது.
ஒரு ஏக்கருக்கு, அதிகபட்சமாக 800 கொய்யாக்கன்றுகள் வரை பயிரிட முடியும். பொதுவாக கொய்யாக்கன்றுகளை வேர்ப்புழு தாக்குவதால், இதற்கு தீர்வாக, செண்டுமல்லியினை பயிரிடுகின்றனர். இதன் வேர் பகுதியில் இருந்து வெளிப்படும் ஒரு வகை ரசாயனம், வேர்ப்புழுக்கள் பரவுவதை தடுக்கிறது. மேலும், இந்த மல்லி, 45 நாட்களில் பூத்து விடுவதால் கொய்யாவுடன் சேர்த்து இரட்டிப்பு லாபம் கிடைப்பதாக தெரிவித்தனர்.