திருநம்பி, திருநங்கை என தமிழக அரசு அடையாள அட்டை வழங்கி வரும் சூழலில் தமிழகத்தில் முதன் முதலாக 'இடையினம்' என்கிற புதிய பாலினத்திற்கான அடையாள அட்டை சக்ரவர்த்திக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
உலகில் ஆண்கள், பெண்கள் என்ற இரு பாலினத்தை தவிர்த்து திருநங்கை, திருநம்பி போன்ற பாலினங்கள் இந்த சமூகத்திற்கு பரீட்சயம். ஆண், பெண் தவிர்த்து திருநங்கை, திருநம்பி என்று அடையாளம் காணப்பட்ட நபர்களுக்கு சமூகத்தில் இன்றளவும் உரிய அங்கீகாரம் வழங்கப்படாமல் அவர்கள் அவமதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். ஆனால், உலகமெங்கும் 60 வகையான பாலினங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன. மரபணு ரீதியிலாக பாதிக்கப்பட்டவர்கள், குரோமோசோம்கள் மாற்றம் பெற்றவர்கள் இந்த பட்டியலில் அடங்குவர்.
இந்நிலையில் தான் 46XXMALE குரோமோசோம் கொண்ட தமிழகத்தை சேர்ந்த சக்கரவர்த்தி இந்தியாவிலேயே முதன் முறையாக “இடையினம்” (INTERSEX) என்ற பாலின அடையாள அட்டையினை பெற்றுள்ளார். இதனை பெற அவர் சந்தித்த அவமானங்கள், போராட்டங்கள் குறித்து பிரபல நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதன் விவரங்கள் பின்வருமாறு-
"ஆரம்பத்தில், மாறுபட்ட பாலினத்தவர்களுக்கான அடையாள அட்டை இருப்பது எனக்குத் தெரியாது, எனது பாலினம் குறித்த விழிப்புணர்வு வீடியோவைப் பார்த்து, திருநங்கை பிரேமகுமாரன் எனக்கு பேஸ்புக்கில் மெசேஜ் செய்து, டிஜி (transgender) அடையாள அட்டையில் இன்டர்செக்ஸ் நபர்களுக்கான பிரிவு உள்ளது என தெரியப்படுத்தினார். மேலும், சைதாப்பேட்டையில் உள்ள திருநங்கைகளின் உரிமைகளுக்காகச் செயல்படும் ஒரு இலாப நோக்கற்ற நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளச் சொன்னார். அங்கே திருநங்கைகளான பிரபாவதி மற்றும் ஸ்வேதா ஆகியோர் ”இடையினம்” பாலின அடையாள அட்டைக்கான விண்ணப்ப செயல்முறைக்கு எனக்கு பெரிதும் உதவினார்கள். அதன்பின் முழுமையான மருத்துவ பரிசோதனைக்குப் பின் நான், இடையினம் என்கிற பாலினத்தை சார்ந்தவன் என்பது உறுதி செய்யப்பட்டு தற்போது அதற்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்துள்ளது. ஏனென்றால் இறுதியாக எனது அடையாளம் ஏற்றுக்கொள்ளப்பட்டது, முன்பு நான் இண்டர்செக்ஸ் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். இனி இந்த அடையாள அட்டையை அவர்களிடம் காட்ட முடியும்” என நம்பிக்கையுடன் பேசினார்.
பண்ருட்டியில் ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்த சக்கரவர்த்தி நிகழ்ச்சி நெறியாளராகவும், குணச்சித்திர நடிகராகவும் இயங்கி வந்தார். ஆண் மற்றும் பெண் பிறப்புறுப்பு இரண்டும் செயல்படும் நிலையில் அவர் உடல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கொண்டு வந்தார். மாதவிடாய் காலங்களினால் பங்கல் இன்பெக்ஷன் ஏற்பட்டு பெரிதும் அவதிப்பட்டுள்ளார். அதே சமயம், 13 வயதில் இருந்தே சிறுநீர் கழிப்பதிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தனக்குள்ள பாலின வேறுபாட்டினை முதலில் மற்றவர்களுக்கு தெரிவித்து போது நண்பர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் கிண்டல் செய்து இவரே புறக்கணித்துள்ளனர்.
இதன் பின்னரே தன் பாலினம் குறித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக விழிப்புணர்வு பதிவிட்டு வந்துள்ளார். பல்வேறு போராட்டங்களுக்கு பின், தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையால் “இடையினம்” (INTERSEX) என்ற பாலின அடையாள அட்டையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
பறவைக்காய்ச்சல் எதிரொலி- கோழி மற்றும் வாத்து இறைச்சிக்கு தடை
நேஷனல் ஜியோகிராபிக் புகைப்பட விருதை தட்டிச் சென்ற இந்திய வம்சாவளி கார்த்திக் சுப்பிரமணியம்