TTF வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ. உத்தரவு பிறப்பித்துள்ள சம்பவம் இணையத்தில் பேசுப்பொருளாகி உள்ளது. பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவின் படி 2033 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி வரை ஓட்டுநர் உரிமம் ரத்து அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய விவகாரத்தில் கைதாகி தற்போது புழல் சிறையில் உள்ளார் யூடியூப் பிரபலம் டி.டி.எஃப் வாசன். தொடர்ந்து அதிவேகமாக வாகனங்களை ஓட்டி, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்ட காரணத்திற்காக ஏற்கெனவே பல புகார்கள் நிலுவையில் இருக்கும் நிலையில் தற்போது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி, சென்னை-வேலூர் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்ட சர்வீஸ் சாலையில், காஞ்சிபுரம் அருகே பைக்கில் சென்றுக் கொண்டிருந்த டிடிஎப் வாசன், சாகச முயற்சியில் ஈடுபட முயல்கையில் மோட்டார் பைக் கட்டுப்பாட்டை இழந்து TTF வாசன் விபத்துக்குள்ளானார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
விலையுயர்ந்த பாதுகாப்பு கவசங்களை அணிந்திருந்ததால் TTF வாசன் சிறு காயங்களுடன் விபத்தில் இருந்து உயிர்த்தப்பினார். ஆனால், வேகமாக வாகனம் ஓட்டியதற்காகவும், மற்றவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தியதற்காகவும் அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து TTF வாசன் செப்டம்பர் 19 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
ஜாமீன் கோரி TTF வாசன் தொடுத்த வழக்கு விசாரணையின் போது, சமூக ஊடகங்களில் வாசனின் பைக் ஸ்டண்ட்களால் பல இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
இது சங்கிலி பறிப்பு மற்றும் பொது சாலையில் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல் போன்ற குற்றங்களுக்கு வழிவகுக்கிறது என்று கூடுதல் அரசு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். வாதங்களை பரிசீலித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்க மறுத்தார். மேலும், இது அவருக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் எனவும், விபத்து காரணமாக அவரது கைகளில் ஏற்பட்ட காயங்களை மதிப்பீடு செய்து தேவையான சிகிச்சை அளிக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவரின் ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளனர். இளைஞர்களிடையே மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என நீண்ட நாட்களாக சமூக ஆர்வலர்கள் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.
TTF வாசன் சமூக ஊடக தளங்களில், குறிப்பாக யூடியூப்பில் பைக் ஸ்டண்ட், பந்தயம், வீலிங்க் போன்றவற்றின் வீடியோக்களை வெளியிடுகிறார். இன்ஸ்டாகிராமில் அவரை 1.2 மில்லியன் பின்தொடர்பவர்களும், யூடியூப்பில் 41.2 மில்லியன் சந்தாதாரர்களும் உள்ளனர். சமீபத்தில் தான் மஞ்சள் வீரன் என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் காண்க:
நீலாம்பரி போல் ஒரு சபதம்- 12 வருஷத்துக்கு பின் செருப்பு அணிந்த விவசாயி
சிலிண்டருக்கு மேலும் ரூ.100 மானியம்- மாநிலம் வாரியாக விலைப்பட்டியல் இதோ