அறுவடை நிறைவுற்று தரிசாக உள்ள விளை நிலங்களில் பசுந்தாள் உரப்பயிர்கள் அல்லது பயிறு வகைகளை சாகுபடி செய்து, மண் வளத்தை பெருக்கி கொள்ளுமாறு வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழகத்தில் கோடை மழை துவங்கி இருப்பதால்,விவசாயிகள் அனைவரும் இந்த மழை நீரை பயன்படுத்தி, தங்களது வயல்களில் பசுந்தாள் உரப் பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம் மண்ணின் அதிகரிக்க இயலும். பொதுவாக பசுந்தாளுரப் பயிர்களான சணப்பு, தக்கைப் பூண்டு, அவுரி, கொளிஞ்சி போன்றவை மண்ணிலுள்ள தழைச்சத்தினை நுண்ணுயிர்கள் மூலம் ஈர்த்து வேர் முடிச்சுகளில் சேகரம் செய்து கொள்ளும்.
பெரும்பாலும் விளைநிலங்களில் அறுவடை நிறைவடைந்த பின் அடுத்த சாகுபடி வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் மண்ணின் தன்மை, ஈரத்தன்மை இருப்பு ஆகியவற்றை சமன் செய்யவும், மேம்படுத்தவும் பசுந்தாள் உரப்பயிர் அவசியமாகும். எனவே விவசாயிகள் சணப்பை, தக்கைப்பூண்டு போன்றவற்றை, ஏக்கருக்கு, 20 கிலோ என்ற அளவில் நெருக்கமாக விதைக்க வேண்டும். பூக்கும் பருவம் வரை வளரவிட்டு, அந்த நிலத்திலேயே மண்ணில் இருக்கும்படி செடிகளை மடக்கி விட்டு உழுதுவிட வேண்டும். பசுந்தாள் உரப்பயிர்களின் விதைகள் கிடைக்கவில்லை எனில், அதற்கு பதிலாக பயறு வகை பயிர்களான காராமணி, கொள்ளு, பாசிப்பயறு ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
இத்தகைய சாகுபடியை வயல்களில் மேற்கொள்ளும் போது பயிர்கள் மண்ணில் நன்கு செழித்து வளருவதுடன் மண்ணின் நீர்ப்பிடிப்பு தன்மையும் அதிகரிக்கிறது. பயிர்களை வறட்சி மற்றும் பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்குகிறது. இதன் மூலம் ஆடி பட்டத்திற்கு தேவையான இயற்கை உரம், மண் வளம், ஈரத்தன்மை அனைத்தும் ஒரு சேர கிடைத்து விடும் என்று தெரிவித்தார்.