குறைந்த வட்டி விகித சூழலில், வைப்பு நிதி முதலீட்டாளர்கள் நீண்ட கால முதலீடு திட்டங்களை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். ஓராண்டுக்கும் மேலாக குறைந்த வட்டி விகித (Low Interest Rate) போக்கு நீடிக்கிறது. கடன்களுக்கான வட்டி விகிதம் குறைந்துள்ள நிலையில், வைப்பு நிதி முதலீடுகளுக்கான வட்டி விகிதமும் குறைந்துள்ளது. பல முன்னணி வங்கிகள் வைப்பு நிதிக்கு, 5 முதல், 6 சதவீத அளவிலான வட்டியே அளிக்கின்றன. பணவீக்கத்தின் தாக்கத்தையும் கருத்தில் கொண்டால், வைப்பு நிதி அளிக்கும் பலன் இன்னும் குறைவதை உணரலாம். இதனால், வைப்பு நிதி முதலீட்டை பிரதானமாக நாடும் முதலீட்டாளர்கள் (Investors) பாதிப்படைந்துள்ளனர்.
வட்டி விகிதம்
பாதுகாப்பு மற்றும் நிலையான பலன் ஆகிய காரணங்களுக்காக வைப்பு நிதி முதலீட்டை (Deposit fund investment) நாடுபவர்கள், சிறந்த பலனை பெற பின்பற்ற வேண்டிய உத்தி பற்றிய கேள்வி எழுகிறது. வைப்பு நிதி முதலீட்டாளர்கள் அதிக வட்டி அளிக்கும் வர்த்தக டெபாசிட்களை நாடலாம் அல்லது வட்டி விகிதம் குறுகிய கால டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் உயரும் வரை காத்திருக்கலாம் என்பது, ஒரு வாய்ப்பாக முன்வைக்கப்படுகிறது. எனினும், வர்த்தக டெபாசிட்கள் மூலம் அதிக வட்டியை நாடும் போது, அதற்கான இடர்தன்மையும் அதிகம் என்பதை உணர வேண்டும். இடரை விரும்பாதவர்களுக்கு இது ஏற்ற வழி அல்ல.அதே நேரத்தில், வட்டி விகிதத்தை பொறுத்தவரை இந்த ஆண்டும் குறைந்த வட்டி விகித போக்கே நீடிக்கும் என கருதப்படுகிறது.
புளும்பர்க் அறிக்கை:
புளும்பர்க் செய்தி நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடன்கள், வைப்பு நிதிகளுக்கான குறைந்த வட்டி விகித போக்கு தொடரும் என தெரிவிக்கிறது. உலகம் முழுதும் உள்ள பெரும்பாலான மத்திய வங்கிகள், உடனடியாக வரும் காலத்தில் வட்டி விகிதத்தை உயர்த்த திட்டமிடவில்லை என, இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மத்திய வங்கிகள், வட்டி விகிதத்தை மேலும் குறைக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த வட்டி விகித போக்கு தொடர வாய்ப்புள்ள நிலையில், வைப்பு நிதி வட்டி விகிதம் உடனடியாக உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை.
நீண்ட கால முதலீடு
தற்போதைய நிலையில், அதிக பலன் அளிக்கும் சிறு சேமிப்பு திட்டங்கள் (Small savings plans) மற்றும் ரிசர்வ் வங்கியின் மாறும் வட்டி விகித பத்திரங்கள் முதலீட்டை நாடுவது ஏற்ற உத்தியாக அமையும். பி.பி.எப்., (PPF) திட்டம், 7.10 சதவீத பலனையும்; செல்வ மகள் திட்டம், 7.60 சதவீத பலனையும் அளிக்கின்றன. நீண்ட கால முதலீட்டை நாடுவதாக இருந்தால், இந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம். மூத்த குடிமகன்களுக்கான சேமிப்பு திட்டம், பிரதம மந்திரி வய வந்தன யோஜனா ஆகிய திட்டங்களையும் நாடலாம். ரிசர்வ் வங்கி பத்திரங்கள் இப்போது, 7.15 சதவீத பலன் அளிக்கின்றன. வைப்பு நிதி முதலீட்டிற்கான தொகையில், ஒரு பகுதியை நீண்ட கால திட்டங்களில் முதலீடு செய்து, எஞ்சிய தொகையை இடர்தன்மைக்கு ஏற்ப, அதிக வட்டி தரும், ‘ஸ்மால் பைனான்ஸ்’ (Small finance) வங்கிகளின் வைப்பு நிதிகளில் முதலீடு செய்யும் உத்தியையும் பரிசீலிக்கலாம். எனினும், அதிக வட்டி பலனை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படக் கூடாது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
நல்ல இலாபம் பார்க்க ஸ்மார்ட் முதலீட்டில் அருமையான திட்டம்! நிச்சயம் வெற்றி தான்!
பொங்கல் பரிசு இன்னும் வாங்கவில்லையா? கவலைப்படாதீங்க! கால அவகாசம் நீட்டிப்பு!