தென் மாவட்ட தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில் மதுரை விவசாய கல்லுாரி வளாகத்தில் நபார்டு (NABARD) வங்கி நிதியுதவியுடன் தொழிற்பேட்டை அமைக்கப்படுகிறது.
தொழிற்பேட்டை
கல்லுாரி வளாகத்தில் மதுரை அக்ரி பிசினஸ் இன்குபேஷன் போரம் என்ற அமைப்பு நபார்டு வங்கியின் மூலம் செயல்படுகிறது. அமைப்பு சார்பில் நபார்டு நிதியில் அமைக்கப்படும் தொழிற்பேட்டை கட்டுமான பணியின் மதிப்பு ரூ.1.5 கோடி. இதில் ரூ.5 கோடியில் இயந்திரங்கள், ரூ. ஒரு கோடியில் ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் அமைய உள்ளது.
இயந்திரங்கள்
இதுகுறித்து அமைப்பின் சி.இ.ஓ. சிவக்குமார், முதுநிலை மேலாளர் குருசங்கர் கூறியதாவது: புதிய தொழில் முனைவோர்களை (Entrepreneurs) ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. புதிய தொழில்களை தொடங்குபவர்கள் அதற்கான இயந்திரங்களை விலைக்கு வாங்குவது சிரமம். அவர்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் எட்டு வகையான இயந்திரங்கள் வாங்கப்பட உள்ளன.
Also Read | டாப் அப் கடன் வசதியை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம்?
அனைத்துமே உணவு சார்ந்த தொழில்நுட்பங்கள் தான். உடனடியாக உணவை பரிமாறும் வகையிலான உணவை பேக்கேஜிங் செய்யும் இயந்திரம், நுாடுல்ஸ், பாஸ்தா, சேமியா தயாரிக்கும் இயந்திரம், தின்பண்டங்கள், மிட்டாய் பார்கள் தயாரிக்கும் இயந்திரம், உணவின் சத்துக்களை வீணாக்காமல் உலர வைத்து பேக்கேஜிங் செய்யும் இயந்திரம், வெற்றிடத்தில் உணவை வறுக்கும் இயந்திரம், குடிநீர், டீ, சூப்பில் கலக்கப்படும் மூலிகை திரவங்கள் தயாரிக்கும் இயந்திரம், பால் பதப்படுத்துதல், பால் பொருட்கள் தயாரிப்பு இயந்திரம், டிப் டீ தயாரிப்பு பேக்கேஜிங் இயந்திரங்கள் வாங்கப்பட உள்ளன.
மொத்த இயந்திரங்களின் மதிப்பு ரூ.5 கோடி. இத்தனை இயந்திரங்களின் மூலம் 100க்கும் மேற்பட்ட புதுமையான தொழில் செய்ய விரும்புவோர் எங்களை அணுகலாம். புதிய தொழில்களை உருவாக்குவதன் மூலம் அனைத்து பயன்களையும் பெறலாம். இதற்கான உணவுப்பொருள் தயாரிப்பு எப்.எஸ்.எஸ்.ஐ., சான்றிதழ் பெற்றுத் தருகிறோம். வெளிநாட்டு ஏற்றுமதிக்கான ஐ.இ.சி. மற்றும் ஆர்.சி.எம்.சி. சான்றிதழ் பெற்றுத் தருகிறோம். கட்டுமானப் பணி முடிந்த பின் 2 மாதங்களில் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றனர்.
தொடர்புக்கு: 99428 85642