அறுவடைக்கு தயாராகி வரும் மக்காச்சோளத்திற்கு சரியான விலையினை நிர்ணயம் செய்ய வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் சேலம் மாவட்ட விவசாயிகள். இம்மாவட்டத்தில் தம்மம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளத்தை சாகுபடி செய்துள்ளனர்.
மானாவாரி பயிரான மக்காசோளத்தை கடந்தாண்டில் சாகுபடி செய்தனர். போதிய பருவமழை பெய்ததாலும், பயிர்களில் படைப்புழு தாக்கம் சற்று குறைவாக இருந்ததாலும் நல்ல விளைச்சல் கண்டுள்ளது.
மக்காச்சோளத்தை பொருத்தவரை, ஆண்டு முழுவதும் அதற்கான தேவை இருக்கிறது எனலாம். பல உணவுப்பொருட்கள் தயாரிப்பதற்கு மூலப்பொருட்களாகவும், கால்நடைகளுக்கு தீவனங்கள் தயாரிப்பதற்கும் பயன்படுகிறது.
தற்போது மக்காசோளம் நன்கு வளர்ந்து செடிகளிலே காய்ந்து கருகி வருவதால் ஒரு சில விவசாயிகள் மட்டுமே அறுவடையில் ஈடுபட்டு வருகின்றனர். மக்காச்சோளத்தின் தேவை அதிகமாக உள்ளதால் எப்போதும் அதற்கு ஓரளவு நல்ல விலை கிடைத்து வந்தது. தற்போது, வெளி மாநிலங்களிலிருந்து மக்காச்சோளத்தின் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து இங்கு விளைந்த மக்காச்சோளத்தை குறைவான விலைக்கு கொள்முதல் செய்கின்றனர் என்கிறார்கள் வியாபாரிகள்.
கடந்த ஆண்டு 100 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை ரூ.2,500 வரை விற்பனையான நிலையில், தற்போது மூட்டை ரூ.1,500 முதல் ரூ.1,600 வரை தான் கொள்முதல் செய்யப்படுகிறது. ஏற்கெனவே இடுபொருள் செலவு, படைப்புழு தாக்குதலில் இருந்து காக்க உரம் செலவு என அதிக செலவாகி உள்ளது. ஆனால் வியாபாரிகள் குறைந்த விலைக்கு கேட்பது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தமிழக அரசு விவசாய பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்வது போன்று மக்காசோளத்தையும் அரசே கொள்முதல் செய்து விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.