24 வருடங்களாக ஒருவர் தேங்காய், அதன் இளநீரை மட்டுமே உண்டு வருகிறார். அவர் எதற்காக தனது உணவு முறையை மாற்றினார், அவருக்கு ஏற்பட்டுள்ள நோயின் தீவிரம் என்பதை காணலாம்.
ஷெனாஸ் ட்ரெஷரி என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றினை பதிவிட்டார். அதற்கு சமூக வலைத்தளங்களில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த வீடியோவில் ஒரு முதியவர் கடந்த 24 ஆண்டுகளாக தேங்காய் மற்றும் இளநீரை மட்டும் தான் உணவாக உட்கொண்டு வருகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
ஷெனாஸ் ட்ரெஷரி தான் பதிவிட்டுள்ள வீடியோவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ” இந்த வீடியோவில் இருப்பவர் பாலகிருஷ்ணன், அவரது நல்ல ஆரோக்கியத்திற்காக ஒரு ❤️ விடுங்கள்' நீங்கள் கற்பனை செய்ய முடியுமா - இவர் 24 ஆண்டுகளாக தேங்காய் மட்டுமே உணவாக உட்கொள்கிறார் என? நான் அதிர்ச்சியில் இருக்கிறேன் - ஆனால் அவரோ தனது வாழ்நாளில் சிறந்த ஆரோக்கியத்துடன் இருந்ததில்லை என்று கூறினார்.”
வீடியோவில் தோன்றும் பாலகிருஷ்ணனும் கடந்த 24 வருடங்களாக தேங்காயை தவிர வேற எதையும் சாப்பிடவில்லை என்றே ஆரம்பிக்கிறார். மேற்கொண்டு பேசுகையில், தனக்கு ஏற்பட்டுள்ள நோயின் தீவிரத்தை குறித்தும் பேசினார். அதன் விவரம்,
(gastroesophageal reflux disease) (GERD) எனப்படும் இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோயால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சையின் ஒரு பகுதியாக தான் தேங்காயினை உணவாக தேர்ந்தெடுத்ததாகவும் பின்னர் அதுவே நாளடைவில் தேங்காய் மட்டும் உணவாக மாறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். தேங்காயில் கால்சியம், மெக்னீசியம், சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் உள்ளன. இது தனது வலிமையை மீட்டெடுக்க உதவியது, இப்போது நான் ஆரோக்கியமாகவும் நன்றாகவும் இருக்கிறேன் என புன்னகை செய்தார் பாலகிருஷ்ணன்.
இந்த வீடியோவில் கமெண்ட் செய்துள்ள பல நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.
“இப்போது நம்மில் பலருக்கு GERD உள்ளது. இந்த நாட்களில் இது மிகவும் பொதுவானது. ஆனால் தேங்காயை மட்டும் சாப்பிடுவது பல ஆண்டுகளாக நம்பமுடியாததாக இருக்கிறது" என்று ஒரு பயனர் கமெண்ட் அடித்துள்ளார். மற்றொரு பயனரோ, “ தேங்காயை மட்டும் உண்டு எப்படி உயிருடன் இருக்க முடியும், நம்பதகுந்தவையாக உள்ளது “ என கருத்து தெரிவித்துள்ளார்.
GERD நோய் அறிகுறி என்ன:
GERD அல்லது இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோயினை அமில ரிஃப்ளக்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு செரிமானம் சார்ந்த நோயாகும், இதில் வயிற்று அமிலம் அல்லது பித்தம் உணவுக் குழாயின் பாதையில் பாய்ந்து புறப்பகுதியை எரிச்சலூட்டுகிறது. இது ஒரு நாள்பட்ட நோயாகும், வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் நெஞ்செரிச்சல் அமில ரிஃப்ளக்ஸ் இருப்பின் அது GERD-யின் அறிகுறியாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு தேங்காய் மட்டுமே உணவாக உண்பது சரியான யோசனை இல்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க:
PROJECT "RE-HAB": தேனீக்களை வைத்து யானைகளை விரட்டும் திட்டம்