நொய்டா சொசைட்டியில் கார் கிளீனராக வேலை செய்து வந்த நபர், தன்னை பணியிலிருந்து நீக்கியதற்காக தான் வேலைப்பார்த்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திலிருந்த கார்கள் மீது ஆசிட் ஊற்றி சேதப்படுத்தியுள்ளார்.
நொய்டா செக்டார் 113 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட செக்டார் 75-ல் உள்ள மேக்ஸ்பிளிஸ் ஒயிட் ஹவுஸ் என்னும் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கார்களை கீளின் செய்யும் நபராக வேலை பார்த்து வந்தவர் 25 வயதான ராம்ராஜ் என்பவர். கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நொய்டா செக்டர் பகுதியிலுள்ள குடியிருப்பில் வேலை செய்து வருகிறார்.
இவரது பணியின் தரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சில வாகன உரிமையாளர்களுக்கு திருப்தி இல்லாமல் இருந்துள்ளது. இதனால் மொத்தமாக அவரை பணியிலிருந்து நீக்க அடுக்குமாடி குடியிருப்பு வளாக சங்கத்தினர் முடிவு செய்தனர்.
இதனால் விரக்தியடைந்த ராம்ராஜ் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் கார் உரிமையாளர்களை பழிவாங்கும் நோக்கில், ஒயிட் ஹவுஸ் என்னும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 12 கார்கள் மீது ஆசிட் வீசி சேதப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் நடைப்பெற்றது கடந்த புதன்கிழமை.
சேதமடைந்த கார்களை கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர்கள் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது இந்தச் செயலுக்குப் பின்னால் இருந்தவர் ராம்ராஜ் என்பதை கண்டறிந்தனர். (மார்ச் 15) புதன்கிழமையன்று காலை 9.15 மணியளவில் இந்த ஆசிட் சம்பவத்தினை நிகழ்த்திவிட்டு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திலிருந்து ராம்ராஜ் தப்பியோடும் காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகியிருந்தன.
இதனையடுத்து அடுக்குமாடி குடியிருப்பு வளாக சங்கத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் அடுக்குமாடி குடியிருப்பில் பணிபுரியும் பாதுகாப்பு அதிகாரி மூலம் ராம்ராஜை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ராம்ராஜிடம் செக்டர் 113 காவல்நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட ராம்ராஜ் யாரோ தன்னிடம் ஆசிட் அமிலத்தை ஒப்படைத்ததாகவும், அவர் என்கிற அடையாளம் தெரியவில்லை எனவும் மழுப்பலான பதிலை கூறியுள்ளார்.
பல முரண்பாடுகளுடன் தொடர்ந்து தெளிவற்ற பதில்களை ராம்ராஜ் கூறி வந்ததாக செக்டர் 113 காவல்நிலைய அதிகாரி ஜிதேந்திர சிங் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார். இதனைத்தொடர்ந்து குற்றத்திற்கான காரணம் வெளிவந்த சூழ்நிலையில் இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, 25 வயதான் ராம்ராஜ் கைது செய்யப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்ட ராம்ராஜ் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 427 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பின்னர் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் காண்க:
குப்பையை கொடு.. தங்கத்தை வாங்கிக்கோ- கிராமத்தை சுத்தப்படுத்த வழக்கறிஞர் புதிய உத்தி
யாரு சாமி இவரு? 20 நிமிடத்தில் 25 மாடி கட்டிடத்தை ஏறி சாதித்த குரங்கு மனிதன்