G-20 உச்சி மாநாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பூந்தொட்டிகளை காரில் வந்த நபர் திருடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், பூந்தொட்டிகளை திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் தலைமையின் கீழ் ஜி-20 மாநாடு ஓராண்டுக்கு நடைபெறுகிறது. இதையொட்டி ஜி-20 ல் அங்கம் வகிக்கும் நாடுகளின் பிரதிநிதிகளுக்கிடையே பல்வேறு தலைப்புகளின் கீழ் ஆலோசனை, கலந்தாய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. அதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து செய்து வருகிறது.
நிகழ்வுக்கான ஏற்பாட்டின் ஒரு பகுதியாக சங்கர் செளக் அருகே குருகிராம் பெருநகர மேம்பாட்டு ஆணையம் (GMDA) மலர் தொட்டிகளை ஏற்பாடு செய்திருந்தது. இதனிடையே 2 நபர்கள் ஆடம்பர ரக கார் ஒன்றில் வந்து இறங்கினர். அந்த காரில் வி.ஐ.பி. என்கிற அடையாளமும் இருந்தது. அவர்கள் யாரும் பார்க்கவில்லை என ஜி-20 நிகழ்ச்சிக்காக வைத்திருந்த பூந்தொட்டிகளை திருடி தங்களது காரில் வைத்து புறப்பட்டு சென்றனர். இந்த வீடியோவை யாரோ ஒருவர் பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட டிரெண்டாகியது. இவ்வளவு விலையுயர்ந்த கார் வைத்திருக்கும் நபரினால் ஒரு பூந்தொட்டியை வாங்க இயலாதா? என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வீடியோவை ஷேர் செய்தனர்.
வீடியோ வைரல் ஆன நிலையில் குருகிராம் பெருநகர வளர்ச்சி கழகத்தின் இணை தலைமை செயல் அதிகாரியான எஸ்.கே.சஹால் இந்த சம்பவம் எங்களது கவனத்திற்கு வந்துள்ளது. மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பூந்தொட்டியை திருடிய நபரின் கார் பதிவெண்னை வைத்து போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். விசாரணையில் குருகிராமில் உள்ள காந்தி நகரில் வசிக்கும் மன்மோகன்(45) என்ற நிலத்தரகர் பூந்தொட்டிகளை திருடியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரிடமிருந்து திருட பயன்படுத்திய கார் மற்றும் திருடப்பட்ட பூந்தொட்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
காவல்துறை அதிகாரி தெரிவிக்கையில், குற்றம் சாட்டப்பட்ட நபர் செவ்வாய்கிழமை இரவு DLF பகுதி -3 க்கு அருகே கைது செய்யப்பட்டார். ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார், மற்றொருவரை தேடி வருகிறோம். அவரது காரின் பதிவெண் ஹிசார் பகுதியில் மன்மோகனின் மனைவி பெயரில் பதிவாகியுள்ளது.
மன்மோகனும் அவரது தோழர்களும் டெல்லியிலிருந்து குருகிராமுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. திருட்டில் ஈடுபட்ட நபர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் DLF பகுதி -3 காவல் நிலையம் சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர், பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய CM ஸ்டாலின்
மண்டல அளவிலான சாராஸ் கண்காட்சி- மகளிர் சுய உதவிக்குழுக்கள் பங்கேற்க அழைப்பு