தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டணம் (Electricity Bill) இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, முதல் 100 யூனிட்டுகள் இலவசம் அதற்கு மேல் பயன்படுத்தினால் அதற்கான கட்டணம் டெலஸ்கோபிக் டாரிஃப் (Telescopic Tarrif) என்ற முறையில் கணக்கிடப்படுகிறது. இதனால், மின் உபயோகம் அதிகரிக்க அதிகரிக்க கட்டணமும் பல மடங்கு அதிகரிக்கும்.
அத்துடன், இரு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் கணக்கிடப்படுவதால் மின் உபயோகம் அதிகரிக்கும். இதனால், தமிழக அரசின் டெலஸ்கோபிக் டாரிஃப் முறைப்படி நுகர்வோர் அதிக கட்டணம் செலுத்த நேரிடும். உதாரணமாக, ஒரு மாதத்திற்கு 200 யூனிட்டுகள் பயன்படுத்தும் ஒருவர் இரு மாதங்களுக்கு 400 யூனிட்டுகளை பயன்படுத்துகிறார் என்று எடுத்துக் கொள்வோம். மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தினால் அவர் செலுத்தும் கட்டணம் குறைவாக இருக்கும். அதுவே, இரு மாதங்களுக்கு 400 யூனிட்டுகள் என்று வரும் போது டெலஸ்கோபிக் டாரிஃப் முறைப்படி கட்டணம் அதிகரிக்கும்.
பொருளாதார நெருக்கடி (Financial Problems)
இந்த அணுகுமுறையால் நடுத்தர மக்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதுடன், பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாக வேண்டியிருக்கிறது. மேலும், மின்சார பயன்பாட்டை கணக்கிடுவதில் நடக்கும் குழப்பங்களாலும் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
உதாரணமாக ஒரு மாதத்தின் 10ஆம் தேதியில் மின்கட்டணம் கணக்கிடப்பட்டால், அதன்பிறகு வரும் மாதங்களிலும் அதே தேதியில் தான் மின்சாரப் பயன்பாடு கணக்கிடப்பட வேண்டும். ஆனால், பல மாதங்களில் ஒரு வாரம் வரை தாமதமாகத் தான் மின் பயன்பாடு கணக்கிடப்படுகிறது. இதனால், தாமதிக்கப்பட்ட நாட்களுக்கான பயன்பாட்டையும் சேர்த்து அதிக தொகை வந்துவிடும்.
மாதாந்திர மின் கட்டணம் (Monthly Electricity Bill)
இந்த நிலையில், மாதாந்திர மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மாதாந்திர கணக்கீடு அமல்படுத்தப்படும் போது, குறைவான கட்டணத்தை நுகர்வோர்கள் செலுத்தும் நிலை ஏற்படும் என்பதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், நாளை நடைபெறவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் இது தொடர்பான அறிவிப்பை அரசு வெளியிடுமா என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க