பான் கார்டு குறித்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்த நிலையில், அதில் முக்கிய உத்தரவு ஒன்றினை நீதிபதி தெரிவித்துள்ளார். அது என்ன வழக்கு, பான் கார்ட் பெறுவதில் வரப்போகும் மாற்றம் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
பான் கார்டு தனிநபர் அடையாள ஆவணங்களில் ஒன்றாக இந்தியாவில் உள்ளது. வங்கி கணக்குகளை உருவாக்கும்போது, முதலீடுகளைச் செய்யும்போது அல்லது பிற வங்கி செயல்பாடுகளைச் செய்யும்போது பான் கார்டு தேவைப்படும். அதுப்போன்ற சூழ்நிலைகளில் பான் கார்டு இல்லையென்றால் மிகவும் சிரமம்.
பான் கார்டு வழங்கும் அங்கீகாரம்:
UTIITSL நிரந்தர கணக்கு எண் (PAN) அட்டை வழங்குவது தொடர்பான சேவைகளை வழங்குகிறது. பான் மற்றும் ஆதார் அட்டை, வாக்காளர் ஐடி மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களை வழங்குதல் போன்ற தொடர்புடைய சேவைகளை செயல்படுத்த 2003 ஆம் ஆண்டு முதல் வருமான வரித் துறையால் UTIITSL அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த சேவைகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் மார்ச் 2024 வரை செல்லுபடியாகும்.
பான் கார்டு- ஆதார் இணைப்பு:
ஆதார் அட்டையுடன்- பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு கடந்தாண்டு ஜூன் 30 என அறிவிக்கப்பட்டது, உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். இந்தியாவில் உள்ள பான் கார்டு வைத்துள்ள 70.24 கோடி பேரில் 57.25 கோடி பேர் ஆதாருடன் தங்கள் கார்டுகளை இணைத்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒருவர் பெறப்பட்ட தகவலில் தெரியவந்தது. அதே நேரத்தில் பான் கார்டு இணைக்காத பலரின் கணக்குகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.
ஜூலை 1, 2017-க்குப் பிறகு பான் கார்டு வழங்கப்பட்டவர்களுக்கு, ஆதாருடன் தானாக இணைக்கப்பட்டது. ஆனால் அந்தத் தேதிக்கு முன்னர் பான் கார்டு வழங்கப்பட்டவர்கள், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139AA இன் துணைப் பிரிவு (2) இன் கீழ், ஆன்லைன் மூலமாக இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றத்தில் வழக்கு:
இந்நிலையில், பான் கார்டு தொடர்பான வழக்கு ஒன்று மும்பை உயர்நீதிமன்றத்திற்கு வந்தது. நீதிபதி பாரதி டாங்ரேவின் ஒற்றை பெஞ்ச் வழக்குத் தொடர்பான புகாரினை விசாரித்தது. அப்போது நீதிபதி தெரிவித்த கருத்து பின்வருமாறு- “பான் கார்டினை தங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படுவதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது, இது ஏற்றுக்கொள்ளக்கூடிய அடையாளச் சான்றாகும். இந்நிலையில், பான் கார்டுகளை வழங்குவதற்கான உரிமம்/அங்கீகாரத்தை தவறாகப் பயன்படுத்தினால் அது நிறுவனத்தின் நலனுக்கு மட்டுமின்றி தேசிய நலனுக்கும் மிகவும் கேடு விளைவிக்கும்”.
தனியார் நிறுவனங்கள், சிறிய அமைப்புகள் கூட பான் கார்டு விண்ணப்பம் செய்யும் வகையில் உள்ள தற்போது நடைமுறையானது தனிநபரின் தகவல்கள் கசிவதற்கு காரணமாக விளங்குகிறது
இதனை ஒழுங்குப்படுத்த வேண்டிய தேவை உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெஞ்ச் இந்த வழக்கை பிப்ரவரி 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. ஆதார் கார்டு சேவை போன்று பான் கார்டு பெறுவதற்கும் தனி மையங்கள் அமைக்கப்படலாம் என்கிற கருத்து நிலவுகிறது. அதன் காரணத்தினால் நீதிமன்றம் வழங்கப்போகிற இறுதி உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Read more: