நித்யானந்தாவின் உடல்நிலை மோசமடைந்துள்ள நிலையில், அவரது சிலையை வைத்து பக்தர்கள் பூஜை நடத்தி வருவது, பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இப்போது நித்தியானந்தா எப்படி இருக்கிறார்? என்று கேட்டு அவரது பக்தர்கள் சமூக வலைதளங்களில் கேட்டு வருகின்றனர். நித்யானந்தா தொடர்பாக கைலாசா உரிய விளக்கம் தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சர்ச்சை சாமியார் நித்யானந்தாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள நிலையில் அவரது உடலில் என்ன பாதிப்பு என்று இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை. சமீபத்தில் அவர் தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஆழ்ந்த சமாதி நிலையில் இருந்து விரைவில் உடலில் குடியேறி சத்சங்க உரையாற்றுவேன் என கூறி இருந்தார்.
இந்நிலையில் கைலாசாவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் நித்யானந்தாவை போன்ற தோற்றத்தில் உள்ள சிலைகளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தும் புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கைலாசாவில் நடந்த இந்த பூஜைகள் பக்தர்கள் மத்தியில் குழப்பத்தையும், சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தி உள்ளது.
ஜீவசமாதி?
உயிரோடு இருக்கும் ஒருவரை தெய்வமாக வழிபடும் நடைமுறை இதுவரை இல்லாத நிலையில், நித்யானந்தாவின் தோற்றத்தில் உள்ள சிலைகளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தும் புகைப்படங்கள் பதிவிடப்பட்டிருப்பது ஏன்? அவர் ஜீவசமாதி ஆகி விட்டாரா? என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது.
இதுவே தற்போது சமூக வலைதளங்களில் பேசும்பொருளாக மாறியிருப்பதால், பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. ஆனால் இந்த தகவல்களை அவரது தரப்பில் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக நித்யானந்தா தரப்பினர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
மரியாதை
கைலாசாவில் உள்ள நித்யனந்தேஸ்வர கோவிலில் இந்த வழிபாடு நடத்தப்பட்டுள்ளது. சித்திரை நட்சத்திர உற்சவம் என்பதால் இந்த பூஜை நடத்தப்பட்டுள்ளது. சித்ரா நட்சத்திரம் என்பது பூமியில் ஸ்ரீபரம்ம சமாரின் செயல்பாடுகளை கொண்டாடும் வகையில் நடத்தப்படும் பூஜை. இது இந்து மதத்தின் உச்ச கடவுளின் நட்சத்திரம் ஆகும். அதன்படியே கைலாசாவில் அவரின் சிலைக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறு பூஜை செய்யப்பட்டது. அவருக்கு இந்த நல்ல நாளில் எங்களின் மரியாதை வழங்கப்பட்டது.
இவ்வாறு அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழப்பத்தில் பக்தர்கள்
இதற்கிடையே நித்யானந்தாவின் உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது? என்று கேட்டு அவரது பக்தர்கள் சமூக வலைதளங்களில் கேட்டு வருகின்றனர். இதுதொடர்பாக கைலாசா உரிய விளக்கம் தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் படிக்க...