தனது விளைநிலத்தில் நெற்பயிர் மூலமாகவே சிவன் உருவம், G20 மாநாடு தொடர்பான விழிப்புணர்வு என பட்டையை கிளப்பி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் நிஜாமாபாத் விவசாயி. இவரது விளைநிலத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஓவியம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ஹிட் அடித்து வருகிறது.
70 வயதான நகுல சின்ன கங்காராம் என்பவர் தெலுங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட கோபன்பள்ளியில் வயல் வைத்திருக்கிறார். இந்தப்பகுதி மக்கள் இவரை சின்னி கிருஷ்ணுடு எனவும் அழைத்து வருகின்றனர். விவசாயத் தொழிலை முதன்மையாக கொண்டு வாழ்ந்து வரும் கங்காரம், இந்திய விவசாயம் மற்றும் இறையாண்மை பற்றிய விழிப்புணர்வைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். மற்றவர்களை கவர இவர் கையில் எடுத்திருக்கும் உத்தி Paddy art (நெற்பயிரில் ஓவியம்).
அவர் 16 குண்டாஸ் நிலத்தைப் பயன்படுத்தி, சிவலிங்கம், ஓம் சின்னம் மற்றும் சோமசூத்திர பிரதக்ஷிணம் (இறைவனைச் சுற்றி வருவதற்கான ஒரு தனித்துவமான வழி) மற்றும் தற்போது நடைப்பெற்று வரும் G20 லோகோவுடன் தெய்வத்தை வழிபடும் உருவம் ஆகியவற்றை உள்ளடக்கிய தனித்துவமான கலை ஓவியத்தை தனது நிலத்தில் உருவாக்கியுள்ளார். இந்த கலைக்கான வடிவமைப்பை ஜே.மகாதேவ் என்ற கலைஞர் ஏற்பாடு செய்துள்ளார்.
தற்போதைய வடிவமைப்பை உயிர்ப்பிக்கும் வகையில் ஐந்து வகையான நெல் விதைகள் பயிரிடப்பட்டன. மாவட்ட விவசாயிகள் பயிற்சி மையத்தின் துணை இயக்குநரும், வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் திட்ட இயக்குநருமான ஆர் திருமலா பிரசாத், கங்கராமின் பங்களிப்பைப் பாராட்டி, இது இந்திய விவசாயத்துக்குக் கிடைத்த மரியாதை என்று தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக, நெல் சாகுபடியின் பல்வேறு அம்சங்கள், இயற்கை வேளாண்மை நுட்பங்கள் மற்றும் சமூகப் பொறுப்பு, ஆன்மீகம் மற்றும் தேசபக்தி பற்றிய விழிப்புணர்வை அவர் விவசாயிகளிடையே தீவிரமாக எழுப்பி வருகிறார்.
கங்காராம் நெற்பயிரில் கலை வடிவத்தை உருவாக்குவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக அவர் சிந்தலூரில் உள்ள தனது விவசாய நிலங்களில் தனது பெற்றோரின் உருவங்களைச் சித்தரித்தும் உள்ளார். அதற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இதுக்குறித்து பேசிய கங்காராம், இந்திய விவசாய முறையின் நடைமுறைகள் பற்றிய அறிவை உலகம் முழுவதும் பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளேன் என்றார். மேலும் தெரிவிக்கையில், சமீபத்தில் வேளாண்மைத்துறை நடத்திய கண்காட்சியில் நெல் சாகுபடி செய்யும் பல்வேறு முறைகளை விளக்கி விவசாய மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதாக கூறினார்.
இவ்வளவு நுணுக்கமான கலை வடிவமைப்பை திட்டமிட்டு ஏற்பாடு செய்து, நெல் பயிர்களை அவற்றின் வடிவமைப்பின் வரிசையில் நட்ட கலைஞர் மகாதேவ் அவர்களுக்கு நன்றியும் தெரிவித்தார். இவரது நிலத்தினை பார்வையிட அப்பகுதி விவசாயிகள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் காண்க:
நீட் தேர்வுக்கு எதிரான திமுக போராட்டம்- மணக்கோலத்தில் வந்த தம்பதி
ஆட்டம் காணும் உள்ளூர் சந்தை- வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத வரி!