புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் அபாயத்தை எடுத்துரைக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 31 அன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அரசு அலுவலகங்களில் உலக புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, புகையிலை பயன்பாட்டால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 மில்லியன் மக்கள் இறக்கின்றனர். ஒருவர் புகையிலை புகைக்கும் போதெல்லாம், அவரது நுரையீரலின் திறன் குறைந்து சுவாச நோய்களின் பிரச்சினைகளுக்கு உள்ளாகிறார்கள். உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை அனுசரிப்பதன் நோக்கம், தனிநபர்களும் நிறுவனங்களும் புகையிலை பயன்பாட்டைக் குறைப்பதற்கும், பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் மற்றும் புகையிலை இல்லாத எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் பங்களிக்க முடியும் என்பதே.
உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2023: தீம்
ஒவ்வொரு ஆண்டும் உலக புகையிலை எதிர்ப்பு தினம் ஒரு மையக்கருவுடன் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு, உலக புகையிலை எதிர்ப்பு தினத்தின் மைய கருப்பொருள் "எங்களுக்கு உணவு தேவை, புகையிலை அல்ல" (We Need Food, Not Tobacco) என்பதாகும்.
2023 உலகளாவிய பிரச்சாரம்- புகையிலையினை பயிரிடும் விவசாயிகளுக்கு மாற்று பயிர் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் வாய்ப்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், சத்தான மாற்று பயிர்களை பயிரிட ஊக்குவிப்பதையும் அடிப்படை நோக்கமாக கொண்டுள்ளது.
உலகில் 124-க்கும் மேற்பட்ட நாடுகளில் புகையிலை வளர்க்கப்படுகிறது. ஆண்டு ஒன்றிற்கு புகையிலை உற்பத்தி மட்டும் ஏறத்தாழ சுமார் 67 லட்சம் டன்கள் ஆகும். 2008 ஆம் ஆண்டில், WHO புகையிலைப் பொருட்கள் தொடர்பான விளம்பரங்களை தடைசெய்தது. அவை இளைஞர்களை புகைபிடிப்பதை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக கருதியது.
உலக புகையிலை எதிர்ப்பு தினம் எப்படி உருவானது?
உலக சுகாதார அமைப்பு ஏப்ரல் 7, 1988 அன்று குறைந்தது 24 மணி நேரமாவது புகையிலையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க மக்களை ஊக்குவிக்கும் நோக்கில்,உலக புகைபிடித்தல் எதிர்ப்பு தினமாக அறிவிக்க அழைப்பு விடுத்தது. அதன்படி 1988 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதியை உலக புகையிலை எதிர்ப்பு தினமாக அறிவித்து மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்று முதல் தற்போது வரை உலக புகையிலை எதிர்ப்பு தினம் மே-31 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.
புகைப்பிடித்தல் என்பது புகைப்பிடிப்பவர் மட்டுமின்றி, புகைப்பிடிப்பவரின் அருகில் உள்ளவரும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. விழிப்புணர்வுகள், மாற்று வழிகள் என அரசு புகையிலை ஒழிப்புக்கான முன்னெடுப்புகளை எடுத்தாலும் தன்னொழுக்கம் தலைத்தூக்கும் போது மட்டுமே புகைப்பிடித்தல் பழக்கம் நம்மை விட்டு முழுமையா நீங்கும் என்பதை நினைவில் கொள்க.
மேலும் காண்க:
செலவுக்கு ஏற்ற வருமானம் தரும் ஆர்க்கிட் மலர் சாகுபடி விவரங்கள்