நடப்பாண்டிற்கான (2019-20) நுண்ணீர்ப் பாசன இயக்கத் திட்டத்தின் கீழ், 1,500 ஹெக்டேர் பரப்பளவு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதன் படி, நுண்ணீர்ப் பாசன இயக்கத் திட்டத்தின் கீழ் இதுவரை 2,287.89 ஹெக்டேர் பரப்பளவு இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 1575.28 ஹெக்டேர் பரப்பிற்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாண்டில் இத் திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ள 1,500 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சாகுபடி பரப்பு அதிகரிக்க இலக்கு
மத்திய அரசு உணவுத் தானிய உற்பத்தி பெருக்க நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு சாகுபடிக்கு தேவையான இடுபொருள்ககளையும், உபகாரணங்களையும், பாசன வசதிகளையும், மானியத்துடன் வழங்கி வருகிறது. மாநிலங்கள் வாரியாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இலக்கு நிர்ணயக்கப் பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உதவும் வகையில், மாவட்ட வேளாண் விரிவாக்க மையங்களில் சான்று பெற்ற விதைகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.
இருப்பில் உள்ள விதை விவரங்கள்
பயறு வகை விதைகள் மற்றும் நிலக்கடலை விதை இரகம் கே.6, கே.9, ட்டி.எம்.வி.13, கோ-6, கோ-7 மற்றும் தாரணி இரகம் ஆகியவை 11.68 மெ.டன்னும், சிறுதானிய விதைகளான சோளம் கே-12, கோ-30, கம்பு கோ-10 ஆகியவை 4.90 மெ.டன்னும், பயறு வகைப் பயிர்களான துவரை கோ.ஆர்.ஜி.7, உளுந்து விபிஎன்.5, விபிஎன்.6, கொள்ளு பிஒய்.2 ஆகியவை 21 மெ.டன்னும், மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம், பயறுவகை திட்டத்தின்கீழ், உளுந்து வம்பன்-5, வம்பன்-6 ஆகிய விதைகளை வாங்கும் விவசாயிகளுக்கு கிலோவிற்கு ரூ.50 அல்லது 50 சதவிகித மானியமும், தேசிய எண்ணெய் வித்துகள் இயக்கத் திட்டத்தின்கீழ், நிலக்கடலைக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.40 அல்லது 50 சதவிகித மானியமும் வழங்கப்படுகிறது.
உரங்களின் இருப்பு விவரம்
உரங்கள் மாவட்டத்தின் அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் மற்றும் தனியார் உரக்கடைகளிலும் போதிய அளவு வைக்கப் பட்டுள்ளது. யூரியா1779 மெ.டன், டிஏபி 755 மெ.டன், பொட்டாஷ் 1003 மெ.டன், காம்ளக்ஸ் உரம் 1872 மெ.டன் தற்போது இருப்பில் உள்ளது என தெரிவித்துள்ளார்.