நீங்கள் இந்த விஷயத்தில் அலட்சியமாக இருந்தால், உங்களின் PPF, SSY, போஸ்ட் ஆபிஸ் டெபாசிட்கள் மற்றும் பிற சிறு சேமிப்புத் திட்டங்கள் இந்த மாத இறுதிக்குள் முடக்கப்படலாம். அதற்கான காரணம் என்ன என்பதனை இப்பகுதியில் காணலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி (PPF), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY- Sukanya Samriddhi Yojana ), அஞ்சல் நிலைய வைப்புத்தொகை மற்றும் பிற சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்கள் தங்கள் ஆதார் எண்ணை தபால் அலுவலகம் அல்லது வங்கிக் கிளையில் இந்த மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
அரசு வழங்கியுள்ள காலக்கெடுவிற்குள் ஆதார் எண்ணை சமர்பிக்க தவறினால் அவர்களின் சிறு சேமிப்பு முதலீடுகள் முடக்கப்படும் வாய்ப்பு உள்ளது. முன்னதாக PPF, SSY, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) போன்ற சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு PAN மற்றும் ஆதார் எண் கட்டாயம் என ஒன்றிய நிதி அமைச்சகம் 31 மார்ச் 2023 அன்று இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது.
சிறு சேமிப்பு திட்டங்கள்:
சிறு சேமிப்பு திட்டங்கள் தனிநபர்கள் செல்வத்தை சேமிக்கும் முதலீட்டு வழிகளில் ஒன்று. இந்தத் திட்டங்களில் பலவற்றில் நீங்கள் செய்யும் முதலீடு வரிச் சலுகைகளுக்குத் தகுதி பெறுகிறது. தகுதியான சில பொதுவான திட்டங்கள் SCSS மற்றும் PPF ஆகும். ஐடி சட்டத்தின் 80-சி பிரிவின் கீழ் ₹1.5 லட்சம் வரை பலன்களைப் பெறுவீர்கள்.
அரசாங்கம் ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி விகிதத்தை மதிப்பாய்வு செய்கிறது. நடப்பு (ஜூலை-செப்டம்பர் 2023) காலாண்டில், சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் 30 bps உயர்த்தப்பட்டுள்ளன. அவற்றின் விவரம் பின்வருமாறு-
- SCSS - 8.2%
- சுகன்யா யோஜனா - 8.0%
- NSC - 7.7%
- கிசான் விகாஸ் பத்ரா - 7.5%
- 5 ஆண்டு வைப்பு - 7.5%
- PO-மாதாந்திர வருமானத் திட்டம் - 7.4%
- PPF - 7.1%
- 2 ஆண்டு வைப்பு - 7.0%
- 3 ஆண்டு வைப்பு - 7.0%
- 1-ஆண்டு வைப்பு - 6.9%
- 5 ஆண்டு RD - 6.5%
நிதி அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, சிறு சேமிப்பு சந்தாதாரர்கள் கணக்கைத் திறக்கும்போது ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்கவில்லை என்றால், செப்டம்பர் 30, 2023-க்குள் தங்கள் ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் எண்ணை பதிவு செய்யாத பட்சத்தில், கணக்கு தொடங்கிய ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒருவரின் சிறுசேமிப்பு கணக்கு முடக்கப்படும்.
ஏற்கனவே உள்ள சந்தாதாரர்களுக்கு, கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சிறு சேமிப்புக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கத் தவறினால், அக்டோபர் 1, 2023 முதல் அவர்களது கணக்கு முடக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
பான் கார்டு குறித்து முக்கிய அறிவிப்பு- இப்பவும் மிஸ் பண்ணாதீங்க
முயல் பண்ணை நடத்துபவரா நீங்கள்? இந்த செய்தி உங்களுக்குத்தான்