தபால் அலுவலக மாத வருமான திட்டம் (எம்ஐஎஸ்) நிலையான வருமானத்தை வழங்கும் குறைந்த ஆபத்துள்ள முதலீட்டு திட்டமாகும். எம்ஐஎஸ் ஒவ்வொரு மாதமும் வட்டி வழங்குகிறது. தங்களின் முதலீடுகளில் இருந்து வருமானத்தை (Income) எதிர்பார்ப்பவர்களுக்கு இத்திட்டம் மிகவும் பொருத்தமானது. கணவன், மனைவி இருவரும் இத்திட்டத்தில் சேரும் போது அவர்களுக்கு கிடைக்க கூடிய வருமானம் இருவருக்குமே சம அளவில் கிடைக்கும்.
எம்ஐஎஸ் திட்டம்
இந்தியாவில் பிரபலமான முதலீட்டு திட்டங்களில் ஒன்று. ஏனெனில் இது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் திட்டம் மற்றும் முதலீடு செய்யப்பட்ட தொகை முதிர்வு காலம் வரை அரசாங்கத்தால் பாதுகாக்கப்படுகிறது. டெபாசிட் செய்யப்பட்ட பணம் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டதல்ல, எனவே பாதுகாப்பாக இருக்கும். இத்திட்டத்தின் கீழ் ஒருவர் தனியாக ரூ.4.5 லட்சம் அல்லது கணவன் மனைவி என கூட்டு சேர்ந்து ரூ.9 லட்சம் வரை முதலீடு (Investment) செய்யலாம். நீங்கள் முதலீடு செய்ய தொடங்கியதும் உங்களுக்கு முதல் மாதத்திலிருந்தே வட்டி கணக்கிடப்படும். இந்த வட்டி தொகையானது ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.
தகுதிகள்
18 வயது நிரம்பிய ஒருவர் தனியாக அல்லது கணவன் மனைவி இருவர் கூட்டாகவோ இக்கணக்கை தொடங்கலாம். மேலும், சிறிய குழந்தைகள் அல்லது தெளிவற்ற மனம் கொண்டவர்களுக்கு அவர்கள் சார்பாக ஒரு பாதுகாவலர் கணக்கை தொடங்கலாம். 10 வயதிற்கு மேற்பட்டோர் தாங்களாகவே கணக்கை தொடங்கலாம்.
கணக்கை தொடங்குவது எப்படி?
இத்திட்டத்தில் சேர நீங்கள் அருகிலுள்ள தபால் அலுவலகத்திற்குச் (Post office) செல்ல வேண்டும். அங்கு வழங்கப்படும் இக்கணக்கிற்கான விண்ணப்ப படிவத்தை வாங்கி, அதில் உங்கள் விவரங்களை பூர்த்தி செய்து சமர்பிக்கவும். இக்கணக்கை திறக்க இதுவரை ஆன்லைன் வசதி இல்லை. ஆனால் விண்ணப்ப படிவத்தை அதிகாரப்பூர்வ வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சிறப்பம்சங்கள்
- குறைந்த ஆபத்து கொண்ட முதிர்வு காலத்திற்கு பிறகு உத்திரவாதமான வருமானத்தை வழங்கும் பாதுகாப்பான முதலீடு இது. இத்திட்டத்தில் ஆபத்து நிலை கிட்டத்தட்ட 0% ஆகும்.
- ரூ.1000 முதலீட்டுடன் இத்திட்டத்தை தொடங்கலாம். இந்த தொகை படிப்படியாக பெருகும்.
- இது 5 வருடத்திற்கான டெபாசிட் திட்டமாகும். 5 வருடத்திற்கு இடையில் திரும்ப பெற இயலாது. 5 வருடம் முடிந்த பின் விருப்பப்பட்டால் நீட்டிக்கலாம்.
- இத்திட்டத்தில் செய்யப்படும் முதலீடுகள் பிரிவு 80C இல் வராது. எனவே வரிவிலக்கு கிடையாது. வருமானத்திற்கான வரி விதிக்கப்படும். இருப்பினும் இதற்கு டி.டி.எஸ் பிடித்தம் கிடையாது.
- ஒரு தனிநபர் அதிகபட்சம் ரூ.4.5 லட்சம் வரை மட்டுமே முதலீடு செய்ய முடியும். அதேநேரம் கணவன் மனைவி இருவரும் கூட்டாக அதிகபட்சம் ரூ.9 லட்சம் வரை முதலீடு (Investment) செய்யலாம்.
- கூட்டுக் கணக்கில் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொரு நபருக்கும் சம பங்கு உண்டு. அதாவது கணவன் மற்றும் மனைவிக்கு சம பங்கு உண்டு.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்! ஒரு ரூபாய் நாணயத்துக்கு ரூ.10 கோடி கிடைக்கும்!
தேர்தல் சோதனையால் தோப்புகளில் குவிந்து கிடக்கும் தேங்காய்கள்! விவசாயிகள் கவலை!