டிக்கெட் எடுப்பதில் சிரமம் இல்லாத வகையினை உருவாக்கும் வகையில் தனியார் பேருந்து நிறுவனம், தங்களது 5 பேருந்துகளில் க்யூஆர் (QR) குறியீட்டு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயணிகள் ஆன்லைன் மூலம் பணத்தை செலுத்தும் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜெய் சக்தி என்கிற தனியார் பேருந்து நிறுவனம் கோயம்புத்தூரில் உள்ள வடவள்ளி-ஒண்டிப்புதூர், கீரநத்தம்-செல்வபுரம், மதுக்கரை மார்க்கெட்-ஒண்டிப்புதூர் மற்றும் சாய்பாபா காலனி ஆகிய வழித்தடங்களில் தாங்கள் இயக்கும் ஐந்து பேருந்துகளின் சேவையில் முதற்கட்டமாக இந்த முறையை அறிமுகப்படுத்தியுள்ளன.
ஜெய் சக்தி பேருந்து சேவையின் மேலாளர் கே.கார்த்திக்பாபு முன்னணி நாளிதழிடம் கூறுகையில், “பல பயணிகள் டிக்கெட் கட்டணத்திற்கான சரியான சில்லரையினை எடுத்து வருவதில்லை. இது நடத்துனர்களுக்கு சிக்கலை உருவாக்குகிறது. இது தான் ஆன்லைனில் டிக்கெட் எடுக்கும் புதிய முறையை பேருந்தில் நடைமுறைப்படுத்த எங்களைத் தூண்டியது. எங்கள் பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதைக் கண்காணிக்க பிரத்யேக மென்பொருளை உருவாக்கியுள்ளோம். அதாவது, பேருந்துக்குள் இருக்கும் QR குறியீட்டை ஸ்கேன் செய்து ஒரு பயணி டிக்கெட் கட்டணத்தை செலுத்தும்போது, நடத்துனர் மற்றும் மேலாளருக்கு குறுந்தகவல் வரும். அதன்பின்னர் நடத்துநர்கள் காகித டிக்கெட்டுகளை பயணிகளுக்கு வழங்குவார்கள்.
“இது நமது மாநிலத்தில் பேருந்துகளில் மேற்கொள்ளப்படும் ஒரு புதிய முயற்சியாக இருப்பதால், பயணிகளிடமிருந்து நிறைய நேர்மறையான பதில்களைப் பெறுகிறோம். இந்த முறை தற்போது கடந்த மூன்று நாட்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது, எதிர்காலத்தில் அதிக பயணிகள் இதைப் பயன்படுத்துவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம், ” என்று அவர் மேலும் கூறினார்.
பத்து ஆண்டுகளாக பேருந்து நடத்துனராக இருந்த கே.தீபக் தெரிவிக்கையில், “பயணிகளிடமிருந்து சரியான சில்லரையினை பெறுவதில் நாங்கள் நிறைய சிக்கல்களை எதிர்கொண்டோம். இந்த சிறிய பிரச்சினை அடிக்கடி சிறு கைகலப்புகளுக்கும் வழிவகுக்கிறது. புதிய அமைப்பு மூலம், இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும். " என நம்புகிறோம் என்றார்.
கே.மாதவி என்ற பயணி இதுக்குறித்து தெரிவிக்கையில், “நான் வடவள்ளியில் இருந்து ரயில் நிலையத்திற்கு QR கோட் முறையைப் பயன்படுத்தி டிக்கெட்டுக்கு 9 ரூபாய் செலுத்தினேன். இது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை பரவலாக பொதுமக்கள் பயன்படுத்த தொடங்கியுள்ள நிலையில் தனியார் பேருந்தின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது என்றார். இவர்களை போல் மற்ற தனியார் போக்குவரத்து ஆபரேட்டர்களும் இந்த முறையை விரைவில் பின்பற்றுவார்கள் என்று நம்புவதாக அவர் கூறினார்”.
கோயம்புத்தூர் நுகர்வோர் பிரிவு செயலாளர் கே.கதிர்மதியோன் தனியார் பேருந்தின் இந்த முயற்சியை வரவேற்பதாக தெரிவித்தார். "இந்த முயற்சி பண பரிவர்த்தனைகளின் தேவையை நீக்கியுள்ளது, இது பயணிகள் மற்றும் பேருந்து நடத்துனர்கள் இருவருக்கும் தொந்தரவு இல்லாத அனுபவமாக உள்ளது," என்று அவர் கூறினார்.
pic courtesy: TNIE
மேலும் காண்க:
Odisha இரயில் விபத்து- சென்னை வந்த 137 பயணிகளுக்கு அரசு செய்த சிறப்பு ஏற்பாடு