காலமாற்றத்திற்கு ஏற்ப ஆன்லையில் விளையாடும் ரம்மியில் சிக்கிய ஒருவர், 10 லட்சம் ரூபாயை சூதாட்டத்தில் இழந்ததுடன், தனது உயிரையும் மாய்த்துக்கொண்டது, தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் ரம்மி (Rummy online)
ஆன்லைன் வழியாக நடைபெறும் சூதாட்டம் மக்களை அதுவும் குறிப்பாக தமிழக மக்களை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. அதிலும் முக்கியமாக ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்பவர்களின் பட்டியல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வரிசையில் அனைவரிடம் உள்ள ஸ்மார்ட்போன் தீயவழிகளுக்கு வித்திட்டு கடைசியில் உயிரையும் பலிவாங்கி விடுகிறது.
பலரும் தங்களின் ஸ்மார்ட்போன் வழியாக யாருக்கும் தெரியாமல் விளையாடி வந்த இந்த ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்கள் தற்போது பலரின் உயிரை எடுக்கும் ஒன்றாக மாறிவிட்டது.தற்போது மீண்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள புருஷோத்தமகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர் சென்னையில் உள்ள தனியார் IT நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தற்போது நடைபெற்ற 2-ம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு செலுத்த தன் ஊருக்கு வந்தார்.
ரூ.10 லட்சம் (Rs 10 lakh)
இந்நிலையில், ஊருக்கு வந்த அவர் தனது வீட்டில் தொடர்ந்து செல்போன் மூலம் ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார். இந்த கேம் மூலம் ஆரம்பத்தில் சிறிதளவு பணத்தைப் பெற்ற உற்சாகத்தில் மேலும் பணம் கிடைக்கும் என்ற ஆசையில் தனது வங்கிக்கணக்கில் இருந்து சுமார் ரூ.10 லட்சத்தை ஆன்லைன் ரம்மி மூலம் இழந்துள்ளார்.
அதுமட்டுமல்லாது மேலும் 6 லட்சம் ரூபாய் கடன் வாங்கி ஆன்லைனில் ரம்மி விளையாடியுள்ளார்.இந்த விவகாரம் அவரது பெற்றோருக்கு தெரியவந்தது. அதனால் அவர்கள் ஆத்திரத்தில் மகனைக் கடுமையாக கண்டித்துள்ளனர். இதனால், மனமுடைந்த ஆனந்தன் ஆத்திரத்தில் தனது ஸ்மார்ட்போனை உடைத்துவிட்டு, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரைக் காப்பாற்ற முயற்சி மேற்கொண்டும் பலன் இல்லை. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆனந்தனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அரசு தடை விதிக்குமா? (Will the government ban it?)
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் மட்டுமல்ல, இவரைப் போல், பலரும் இத்தகைய ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கிக்கொண்டு சீரழிகின்றனர். எனவே இளைய தலைமுறையினரைச் சீரழிக்கும் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
மேலும் படிக்க...
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 விரைவில்- அதிரடியாக அறிவித்த அமைச்சர்!
கட்டணம் வசூலித்தால், கல்லூரி உரிமம் ரத்து- பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை!