ஓட்டல் ஒன்றில் வழங்கப்பட்ட குலாப் ஜாமுனில் கரப்பான்பூச்சி கிடந்த விவகாரத்தில் 55 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி மாநில நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தரமே மந்திரம் (Quality is magic)
உணவுப் பொருட்களை விற்பனை செய்வோர், அரசு விதித்துள்ள தரத்துடன் தங்களது உணவுப் பொருள் உள்ளதா என்பதை அவ்வப்போது சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டியது கட்டாயம். அதைச் செய்யத் தவறினால், தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம்.
கர்நாடகாவின் பெங்களூருவைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜண்ணா. மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில், இவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
கடந்த 2016ல் பெங்களூருவின் காந்திநகரில் உள்ள காமத் ஓட்டலில் சிற்றுண்டி சாப்பிட நண்பருடன் சென்றேன். இரண்டு தோசை மற்றும் குலாப் ஜாமுன் 'ஆர்டர்' செய்தேன்.
கரப்பான்பூச்சி (Cockroach)
குலாப் ஜாமுன் கிண்ணத்தில் கரப்பான்பூச்சி செத்து கிடந்தது. அதை படம்பிடிக்க முயன்ற போது, சர்வர், என்னிடம் இருந்த 'மொபைல் போனை' பறிக்க முயன்றார். எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ரூ.55,000 இழப்பீடு (Compensation of Rs.55,000)
இந்த மனுவை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம், பாதிக்கப்பட்ட வழக்கறிஞருக்கு 55 ஆயிரம் ரூபாய் இழப்பீடு அளிக்கும்படி ஓட்டல் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக மாநில நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் ஓட்டல் நிர்வாகம் மேல்முறையீடு செய்தது.
உத்தரவு உறுதி
அதில் சம்பவம் நடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின் பணம் பறிக்கும் நோக்கத்துடன் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மனுவை விசாரித்த மாநில நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம், மாவட்ட ஆணையத்தின் உத்தரவை உறுதி செய்தது.
தர்மமே காக்கும் (Dharma will protect)
உணவுப் பொருள் தயாரித்து விற்பனை செய்வோர், நுகர்வோரின் நலனைக் கருத்தில்கொண்டு, மனசாட்சியுடனும் நடந்து கொண்டால், அந்தத் தொழிலுக்கான தர்மத்தைக் கடைப்பிடித்தால், அந்த தர்மமே நம்மைக் காக்கும்.
மேலும் படிக்க...