ஜூன் 23 அன்று, கலிபோர்னியாவின் பெடலுமாவில் நடந்த 2023-ஆம் ஆண்டின் உலகின் மிக அருவருப்பான நாய் போட்டியில் 7 வயது முடி இல்லாத சைனீஸ் க்ரெஸ்டட் நாய்க்குட்டியான ஸ்கூட்டர் வெற்றி பெற்றது. NBC-யின் காடி ஸ்வார்ட்ஸ் இப்போட்டியின் நடுவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் அருவருப்பான நாய் போட்டி, தொற்றுநோய் காரணமாக நிறுத்தப்பட்ட இப்போட்டி இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு வெற்றிகரமாக திரும்பியது.
ஸ்கூட்டர் நாய்க்கு பின்னாடி இப்படி ஒரு கதையா?
ஸ்கூட்டர் என்கிற நாய் சிதைந்த பின் கால்களுடன் தான் பிறந்தது. ஸ்கூட்டரின் மூட்டுகள் மற்றும் கால்கள் பின்னோக்கி உள்ளன. ஸ்கூட்டர் இவ்வாறு பிறந்ததால் அதன் வளர்ப்பாளர் அதனை கருணைக்கொலைக்காக விலங்கு கட்டுப்பாட்டு மையத்திடம் வழங்கி உள்ளார். ஆனால், அதிர்ஷ்டவசமாக Saving Animals From Euthanasia (SAFE) குழுவினரால் ஸ்கூட்டர் நாய் மீட்கப்பட்டது.
குழுவில் இருந்த ஒருவர் முதலில் ஸ்கூட்டர் நாயினை தத்தெடுத்து சுமார் ஏழு வருடங்கள் வைத்திருந்தார். அந்த நேரத்தில் எல்ம்க்விஸ்ட் (இவரும் குழுவில் ஒருவர்) ஸ்கூட்டரின் உடல் பிரச்சினையை சரிசெய்ய மருத்துவ வசதிகளை மேற்கொண்டுள்ளார். ஆனால் தத்தெடுத்த நபரால் ஸ்கூட்டரைத் தொடர்ந்து பராமரிக்க முடியாமல் போனது. இதனை அறிந்த எல்ம்க்விஸ்ட் ஸ்கூட்டர் நாயை தத்தெடுத்து தற்போது சுமார் ஏழு மாதங்களாக பராமரித்து வருகிறார்.
பின்னங்கால்கள் சிதைந்துள்ள நிலையில், ஸ்கூட்டர் தனது முன் கால்களின் உதவியுடன் மட்டுமே சிரமப்பட்டு நடக்க இயன்றது. வயது ஆக ஆக அதிகம் சோர்வுற்று நகர முடியாமல் இருந்தது. ஸ்கூட்டர் நாய்க்கு தகுந்தவாறு ஒரு வண்டியை பெற உடல் சிகிச்சை நிபுணர் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வண்டியுடன் ஸ்கூட்டர் நாயின் உடல் முழுமையாக பொருந்த சிறிது காலம் எடுத்தாலும், இப்போது வேகமாக நகரும் வகையில் முன்னேறியுள்ளது. ஸ்கூட்டர் மற்ற நாய்களைப் போலவே மோப்பம் பிடிக்கும் தன்மையினை கொண்டுள்ளதாக அதன் தற்போதைய உரிமையாளர் கூறுகிறார்.
கடந்த ஆண்டின் வெற்றியாளர் யார்?
2022 ஆம் ஆண்டு நடைப்பெற்ற போட்டியில் மிஸ்டர். ஹேப்பி ஃபேஸ் என்கிற நாய் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. ஹேப்பி ஃபேஸ் நாயானது கட்டிகள், நரம்பியல் பிரச்சினைகள் மற்றும் சாய்ந்த தலை உட்பட பல உடல்நல சவால்களை எதிர்கொண்டது. அந்த நாயுக்கு எப்போது டயப்பரின் உதவி தேவைப்பட்டது மற்றும் நடப்பதில் கூட பெரும் சிரமத்தை எதிர்க்கொண்டது.
அருவருப்பான நாய் போட்டியானது, நாய்களை தத்தெடுப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குறைபாடுகளுடன் காணப்படும் நாய்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கத்துடனும் செயல்படும் ஒரு முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது. சமீபகாலமாக இதற்கு பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது.
மேலும் காண்க:
ரேஷன் கடைகளில் 30 ரூபாய்க்கு சானிட்டரி நாப்கின் விற்பனை தொடக்கம்!