இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் மீனவர்கள் வலையில் அரியவகை ஏற்றுமதி தரம் வாய்ந்த கிளி சிங்கி இறால்கள் கிடைத்திருப்பதால் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். பாம்பன், மண்டபம், ராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் இருந்து சுமார் 900 படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்கின்றனர். தற்போது இப்பகுதிகளில் ஏற்றுமதி தரம் வாய்ந்த கிளி சிங்கி இறால்கள் கிடைத்து வருகின்றன.
மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி போன்ற பகுதிகளில் மட்டுமே கிடைக்கும் இந்த வகை இறால்களுக்கு வெளிநாடுகளில் நல்ல விலைக்கு விற்பனையாகிறது. பாறை இடுக்குகளில் மட்டுமே வளரும் கிளி சிங்கி இறால், மணி சிங்கி இறால், பேய் சிங்கி இறால், வெள்ளை சிங்கி இறால் போன்ற மீன்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப் படுகிறது. குறிப்பாக ஜப்பான், மலேசியா, தாய்லாந்து நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதியாகிறது. கிலோ ரூ.2500 வரை விற்பனையாவதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனவே மீனவர்கள் இவ்வகை இறால்களை உயிருடன் பிடித்து வீடுகளில் தொட்டிகளில் வளர்த்து உயிருடன் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.