மாவட்ட வேளாண்மைத் துறை சார்பில் சிறு, குறு விவசாயிகளுக்கு, கட்டணமில்லா கோடை உழவு செய்து தரப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழகம் முழுவதும் கோடை உழவு நடைபெற்று வருகிறது. எனினும் ஊரடங்கு உத்தரவு காரணமாக சிறு, குறு விவசாயிகளுக்கு தொடர்ந்து உழவு பணி மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. போதிய தொழிலாளர்கள் மற்றும் வேளாண் இயந்திரங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட வேளாண்மைத் துறை தடையின்றி உழவு பணி தொடர விவசாயிகளுக்கு தேவையான உதவிகளையும், ஆலோசனைகளையும் செய்து வருகிறது.
மதுரை மாவட்டத்தில் கோடைக்கு ஏற்ற பயிரான உளுந்து, கம்பு, துவரம், பச்சை பயறு போன்றவற்றை பயிரிடுகின்றனர். நடப்பாண்டில் இப்பணி தொடர்ந்து நடைபெற்றால் மட்டுமே வரும் காலத்திற்கான தானிய உற்பத்தியினையும், அதன் இருப்பையும் நம்மால் உறுதி செய்ய இயலும்.
கோடை உழவை மேற்கொள்ளும் சிறு மற்றும் குறு விவசாயிகள் இலவசமாக செய்து தரப்படும் உழவுப் பணிகளை பெற உழவன் செயலி மூலம் பதிவு செய்து தங்களின் தேவையை உறுதி செய்யவும். இதுவரை அலங்காநல்லூர் வட்டாரத்தில் மட்டும் 1,400க்கும் மேற்பட்ட விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். குறு விவசாயிகளுக்கு 2 ஏக்கரும், சிறு விவசாயிகளுக்கு 5 ஏக்கரும் இலவசமாக உழவு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது. இந்த வாய்ப்பினை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.