சமீப காலமாக தென்னை மரங்களில் ரூகோஸ் என்னும் சுருள் வெள்ளை ஈக்கள் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுத்துகின்றன. தற்போது நிலவிவரும் தட்ப வெப்பம் வெள்ளை ஈக்களின் பெருக்கத்திற்கு ஏதுவாக உள்ளது. தமிழகத்தில் இதன் தாக்கம் பரவலாக காணப்படுகிறது. குறிப்பாக, கடலூர், திருப்பூர், கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தென்காசி, கோவை, தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் அதிக அளவில் காணப்படுகிறது.
தென்னை தோப்புகளில் வெள்ளை ஈக்களின் தாக்குதலால் மகசூல் பாதிக்கப்பட்டு வருமானம் இழக்கும் சூழல் உருவாகி உள்ளது. வெள்ளை ஈக்களானது, தென்னை மரங்களை மட்டுமல்லாது வாழை, சப்போட்டா ஆகிய பயிர்களையும் தாக்குவதால் தகுந்த இழப்பீடும், அவற்றை அழிப்பதற்கான ஆலோசனைகளையும் வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர்
வெள்ளை ஈ தாக்குதல்
- பொதுவாக இவ்வகை ஈக்கள் தேன் போன்ற திரவக் கழிவுகளை ஓலைகளின் கீழ்மட்ட அடுக்கின் மேற்பரப்பில் பரப்புகின்றன. அதன் பின் இவற்றின் மேல் கேப்னோடியம் என்னும் கரும்பூஞ்சாணம் படா்கிறது.
- வெள்ளை ஈக்கள் பெரும்பாலும் குட்டை மற்றும் நெட்டை வீரிய ஒட்டு ரகங்களையே அதிக தாக்குகின்றன. குறி ப்பாக சௌகாட் ஆரஞ்சு குட்டை, மலேசியன் பச்சைகுட்டை, மலேசியன் மஞ்சள் குட்டை ஆகிய ரகங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன.
- இவற்றின் அறிகுறியாக சுருள் வடிவத்தில் இலைகளின் அடிப் பாகத்தில் சிறிய முட்டைகள் காணப்படும். பின்னர் குஞ்சுகளும், முதிர்ந்த ஈக்களும் ஓலைகளின் அடியில் இருந்து சாற்றை உறிஞ்சுகின்றன.
மானியம் மற்றும் தடுக்கும் முறை
முதல் கட்டமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி, அண்ணாகிராமம் ஆகிய வட்டாரங்களுக்கு மானியமும், தேவையான தடுப்பு உபகரணங்கள் வழங்கப் பட்டுள்ளன. இப்பகுதியில் மட்டும் சுமார் 1,450 ஹெக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது. மானிய திட்டத்தை துவக்கி வைத்து பேசிய அவர், சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த அரசு மானியமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ.2,100 வீதம் வழங்குகிறது. அத்துடன் அதிவேக திறன்கொண்ட தெளிப்பான் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிக்க பின்னேற்பு மானியமாக ரூ.ஆயிரம் வழங்குகிறது. மேலும் மஞ்சள் ஒட்டுப் பொறி 10 எண்கள் மற்றும் ஒட்டுவதற்காக விளக்கெண்ணெய் 100 மில்லி, கயிறு ஆகிவற்றுடன் கிரைசோபெர்லா இரை விழுங்கி முட்டை கொண்ட அட்டைகள் 1,000 எண்களும் வழங்கப்படுகின்றன. இரை விழுங்கி முட்டைகள் வழங்கப்படுவதால் தென்னந்தோப்புகளில் எக்காரணம் கொண்டும் பூச்சி மருந்து தெளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.