கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலை இந்தியா முழுவதும் ஏறுமுகமாகவே இருந்தது. இதனால் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். அதன் எதிரொலியாக தமிழகத்திலும், சின்னவெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்து இருந்தது. இதற்காக அரசு வெளி மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்து வருகிறது.
அரசு உழவர் சந்தையின் மூலம் சின்னவெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தினை குறைந்த விலையில் விற்பனை செய்கிறது. வெளி சந்தைகளில் கிலோ ரூ.150 முதல் 180 வரை விற்பனை செய்யப்படும் போது தேனி மாவட்டம், கம்பம் உழவர் சந்தையில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.80 முதல் 100க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் சின்னவெங்காய விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. அரசின் உத்தரவை தொடர்ந்து வெங்காயத்தை மானிய விலையில் விற்பனை செய்ய நடவடிக்கைகள் எடுத்து வருவதாக உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.