இன்றைய உலகில் தொழில்நுட்ப வசதிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கைப்பேசி முதல் கார்கள் வரை அனைத்தும் நவீன மயமாகிவிட்டது. அவ்வகையில், மின்சார வாகனங்களின் வருகை தொழில்துறையை தலைநிமிரச் செய்துள்ளது. சாதாரண பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு அதிகம் என்பதை உணர்ந்து, பல முன்னணி கார் நிறுவனங்கள் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தி, வெற்றிகரமாக விற்பனையும் செய்து வருகிறது.
இந்த வரிசையில், இந்தியாவின் மிகச் சிறந்த கார் நிறுவனமான டாடா மோட்டார்ஸ், ஒரே நாளில் 101 மின்சாரக் கார்களை விநியோகம் செய்து சாதனை படைத்துள்ளது. அதுவும் நம்ம தமிழ்நாட்டின் தலைநகரமான சிங்காரச் சென்னையில் தான் இச்சாதனை அரங்கேறியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் (Tata Motors)
டாடா மோட்டார்ஸின் நெக்ஸான் இவி மற்றும் டிகோர் இவி என்ற இரு மின்சாரக் கார்கள், நாட்டில் நல்ல வரவேற்பை பெற்றவை. மேலும், சந்தையில் விற்பனையாகும் மற்ற கார்களை விட, இவை குறைந்த விலைக்கே விற்பனையாகிறது. பாதுகாப்பு திறன் மிக்க நெக்ஸான் இவி மின்சாரக் கார் ரூ. 14.54 லட்சம் என்ற ஆரம்ப விலையிலும், டிகோர் இவி ரூ. 12.24 லட்சம் என்ற ஆரம்ப விலையிலும் விற்பனைக்கு கிடைக்கின்றது.
சென்னையில் ஒரே நாள், ஒரே நேரத்தில் 70 நெக்ஸான் இவி மற்றும் 31 டிகோர் இவி என மொத்தமாக 101 டாடா மினாசாரக் கார்கள் விநியோகம் செய்து, வரலாற்றில் மிகச் சிறப்பான நிகழ்வை டாடா மோட்டார்ஸ் அரங்கேற்றி உள்ளது. இதனை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பதிவின் வழியாக டாடா மோட்டார்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது. வேறு எந்த கார் நிறுவனமும் இச்சாதனையை இதுவரை செய்ததில்லை. ஆனால், டாடா மோட்டார்ஸ் இந்த மாத தொடக்கத்திலேயே, 712 நெக்ஸான் இவி மற்றும் டிகோர் இவி மின்சாரக் கார்களை கோவா மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய இரு மாநிலங்களில் விநியோகம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வருகின்ற ஏப்ரல் 29 ஆம் தேதி அன்று, புதுமுக மின்சாரக் கார் ஒன்றை உலகளவில் வெளியீடு செய்ய திட்டமிட்டுள்ளது. மின்சார வாகனங்களின் பயன்பாடு தற்போது மெல்ல மெல்ல அதிகரித்து வருவதை நம்மால் மறுக்க முடியாது.
மேலும் படிக்க
மீண்டும் இரயில் நிலையங்களில் கொரோனா தொற்று சோதனை!
143 பொருட்களுக்கு உயர்கிறது ஜிஎஸ்டி: அதிர்ச்சியில் பொதுமக்கள்!