இன்று பரவலாக மக்களின் நுகர்வு இயற்கை நோக்கி திரும்பி உள்ளது எனலாம். இதனால் வேளாண் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. அந்த வகையில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் இருந்து அதிக அளவில் இளநீர் விற்பனை செய்யப் பட்டு வருகிறது.
தேனி மாவட்டம், கம்பம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். முக்கியமாக நெல், திராட்சை, வாழை மற்றும் தென்னை பயிரிட பட்டுள்ளன. இவற்றில் தென்னை விவசாயம் மட்டும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வருகிறது. தேங்காயை காட்டிலும் இளநீர் கொள்முதல் விலை அதிகம். அதுமட்டுமல்லாது ஆண்டுக்கு 3 முறை மட்டுமே தேங்காய் பறிக்க இயலும், ஆனால் இளநீரை ஆண்டுக்கு நான்கு முறை பறிக்கலாம். இதனால் இங்கிருந்து இளநீ பல்வேறு இடங்களுக்கு விற்பனை செய்யப் பட்டு வருகிறது. வருடம் முழுவதும் இதன் தேவை இருப்பதால் விவசாயிகளுக்கு குறைவில்லா வருவாய் தருவதாக தெரிவித்தனர்.
கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனை செய்வதால் இளநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களான மதுரை, திண்டுக்கல், திருச்சி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து செந்நிறம் மற்றும் பச்சை நிற இளநீர் கொள்முதல் செய்வதற்காக மொத்த வியாபாரிகள் வருகின்றனர். இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.