ஊரடங்கு உத்தரவு காரணமாக அத்தியாவிசிய பொருட்களான காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை வாங்குவதில் சிரமம் நிலவி வந்தது. குறிப்பாக சென்னை போன்ற பெரு நகரங்களில் அனைவரின் தேவையையும் பூர்த்தி செய்வது சற்று சவாலாகவே இருந்தது. இதற்காக தோட்டக்கலைத்துறை ஆன்லைன் மூலம் காய்கறிகள், பழங்கள் விற்பனையை தொடங்கியது. மக்களிடையே கிடைத்த வரவேற்பிணை அடுத்து இத்திட்டம் பிற மாநகராட்சிகளுக்கும், நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
வேளாண் துறை அனுமதியுடன் சென்னையில் ethottam https://apkpure.com/ethottam/io.ionic.ethottam என்ற, வெப்சைட் வாயிலாக ஆன்லைனில் முதன் முதலாக, காய்கறிகள், பழங்கள் விற்பனை தொடங்கபட்டது. இதற்காக சென்னையின் முக்கிய பகுதிகளில் விற்பனை கிடங்குகள் அமைக்கப்பட்டு தினமும் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றனர்.
ஆயிரக்கணக்கானோர் இணையதளம் வாயிலாக தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்களை ஒரு நாளைக்கு முன்பே முன்பதிவு செய்து விடுகிறார்கள். தரம் மற்றும் விலை ஆகிய இரண்டும் நியாயமாக இருப்பதால் இந்த திட்டம், பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் பொருட்களை வீடுகளுக்கு கொண்டு சேர்க்கும் பணியை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்மிகவும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் கையாள்வதால் இன்று பலருடைய தேவையை பூர்த்தி செய்து வெற்றி கண்டுள்ளது.
சோதனை முயற்சியாக தொடங்கிய இத்திட்டம், வெற்றி பெற்றதை அடுத்து முதல் கட்டமாக மதுரை, சேலம், கோவை, திருச்சி போன்ற மாநகராட்சிகளில் உள்ள, முக்கிய பகுதிகளில் விரிவுபடுத்தப்பட உள்ளது. அத்துடன் முன்பதிவு செய்த, மூன்று மணி நேரத்தில் பொருட்கள் வாடிக்கையாளரை சென்றடைய திட்டமிட்டுள்ளது. தோட்டக்கலைத்துறையினரின் இம்முயற்சி வரவேற்க தக்கது.