பறவைகள், விலங்குகள் உள்ளிட்டவற்றுக்கு தெரிந்தோ, தெரியாமலோ நாம் செய்யும் தீங்கு, நமக்கு இக்கட்டில் சிக்கவைத்துவிடும். அந்த வகையில், இங்கு பெண் ஒருவர், காகங்களில் தொடர் தொல்லைக்கு ஆளாகி, வாழ்க்கையே வெறுத்துவிட்ட நிலையில், எங்கு சென்றாலும் கையில் குச்சியுடன் சுற்றித் திரிகிறார்.
கர்நாடகாவில் காகங்கள் துரத்தி துரத்தி கொத்துவதால், ஒரு பெண் கடும் அவஸ்தையில் பரிதவிக்கிறார். கர்நாடகாவில், தாவணகரே மாவட்டம், சிக்கமல்லனஹொளேவில் வசிப்பவர் பசம்மா.
துரத்தும் காகங்கள்
சில நாட்களுக்கு முன், இவரது வீட்டு முன்பகுதியில் உள்ள மின் கம்பத்தின் மீது, காகம் ஒன்று அமர்ந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில், காகம் இறந்தது. இறந்து கிடந்த காகத்தை, அவர் வேறு இடத்துக்கு எடுத்து சென்று வீசியெறிந்தார். அன்று முதல் இவருக்கு புதுவிதமான தலைவலி துவங்கியது. காகங்கள் அவரை விடாமல் துரத்துகின்றன.
விடாது கருப்பு
பசம்மா வீட்டிலிருந்து வெளியே வந்தால் போதும், காகம் பறந்து வந்து அவர் தலையில் கொத்துகின்றன. எங்காவதுசென்றால், பின்தொடர்ந்து செல்கின்றன. விரக்தி அடைந்த அவர், வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுகிறார். இவர் படும் அவதியை பார்த்த கிராமத்தினர், காகத்தை என்ன செய்தாய்? உனக்கு ஏன் தொல்லை கொடுக்கின்றன என கேலி செய்கின்றனர். சிலர், கடவுளிடம் வேண்டுதல் வைக்கும்படி ஆறுதல் கூறுகின்றனர்.
பூஜை செய்ய முடிவு
பசம்மாவும், பாவகடாவில் உள்ள சனி பகவான் கோவிலுக்கு சென்று, சிறப்பு பூஜை செய்ய முடிவு செய்து உள்ளார். இதுகுறித்து பசம்மா கூறியதாவது: எங்கள் வீட்டு முன், மின் கம்பங்கள் உள்ளன. பல முறை காகங்கள் மின்சாரம் பாய்ந்து இறந்து விழும். அவற்றை எடுத்து, வேறு இடத்தில் வீசுவேன்.
ஆனால், காகத்தை நான் தான் சாகடித்தேன் என நினைத்து, காகங்கள் என் தலையை சுற்றி வந்து கொத்துகின்றன. நான் எங்கு சென்றாலும், பின் தொடர்கின்றன. கையில் குச்சியுடன் செல்ல வேண்டியுள்ளது. இதிலிருந்து விடுதலை கிடைத்தால் போதும் என தோன்றுகிறது. சனி பகவான் கோவிலுக்கு சென்று வந்த பின், காகங்கள் தொந்தரவு சரியாகும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
ஒரு சரக்கு வாங்கினால், 2 பாட்டில் இலவசம் - குஷியில் குடிமகன்கள்!
கூழ் காய்ச்சும் போது வலிப்பு -பாத்திரத்தில் விழுந்து இளைஞர் மரணம்!