திருமணம் என்பது நம் வாழ்வில் நடக்கும் முக்கியத்துவம் வாய்ப்பு விழா. அதிலும் தமிழகப் பெண்களைப் பொருத்தவரை தங்கள் திருமண முகூர்த்தப் பட்டு உன்னதம் வாய்ந்தது. அதனைத் தேர்வு செய்வதற்கு, பல சடங்குகளைக் கடைப்பிடிப்பது வழக்கம். அந்தப் பட்டுப்புடவை அவர்கள் வாழ்நாள் முழுவதும் சிறப்பு மிக்கதாகக் கருதப்படுவதும் உண்டு.
சிறுமுகைப் பட்டு
அத்தனை சிறப்பு மிக்கத் திருமணப் பட்டுப்புடவையில் மணமக்களின் உருவம் பதிக்கப்பட்டால் எப்படி இருக்கும். அப்படி வாய்ப்பைத் தந்து வாடிக்கையாளர்களின் மனதைச் சுண்டி இழுக்கிறது சிறுமுகைப் பட்டு.
பெண்களுக்கு மிகவும் பிடித்தமானது என்றால் அது புடவை தான். அப்படிப்பட்ட புடவைக்கு பெயர் போன ஊர் தான் கோவை மாவட்டம் அருகே உள்ள சிறுமுகை. இந்த சிறுமுகை நகரத்தில் நெசவு செய்யும் புடவைகளான காட்டன் பட்டு, மென்பட்டு, பட்டு உள்ளிட்டவை தமிழகத்தின் பிற பகுதிகள், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. உலக மக்களையும் சிறுமுகை பட்டானது கவர்ந்திழுத்து வருகிறது.
புதிய முயற்சி
அப்படிப்பட்ட இந்த சிறப்பு வாய்ந்த சிறுமுகை பட்டில் புதிதாக திருமணம் ஆகும் மணமக்களை கவரும் வகையில், மணமக்களின் புகைப்படங்கள் பொறித்த சேலைகள் நெசவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
சிறுமுகையை சேர்ந்த டிசைனர் தர்மராஜ், நெசவு தொழிலாளி ராதாகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
திருமணப் பரிசு
இந்த புடவைகள் மக்கள் மத்தியில் மிகவும் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் ஆர்டர் கொடுத்து இந்த புடவைகளை வாங்கி செல்கிறார்கள். இதுகுறித்து தர்மராஜ் , ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது:-
எல்லோரும் திருமண புடவைகள் வாங்கும் போது அதனை பார்த்து பார்த்து வாங்குவார்கள். அதனை தங்கள் நினைவாக வைத்து கொள்வார்கள். எல்லோரும் புடவைகள் நெசவு செய்தாலும், நாங்கள் செய்வதில் சற்று வித்தியாசம் இருக்க வேண்டும் என்று நினைத்தோம்.
விலை
அதற்காக புதிதாக திருமணம் செய்யும் தம்பதிகளின் புகைப்படங்கள் பொறித்த புடவைகளை நெசவு செய்ய ஆரம்பித்தோம். இது தற்போது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் ஆர்டர்களும் கணிசமாக வருகிறது. புடவையின் முந்தானை பகுதியில் தான் மணமக்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். ஒரு புடவையை நெசவு செய்வதற்கு 30 நாட்கள் ஆகும். ஒரு புடவை ரூ.45 ஆயிரத்தில் இருந்து ரூ.1லட்சத்து 35 ஆயிரம் வரை விற்பனை செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் படிக்க...