தமிழக அரசு வேளாண் பணிகளுக்கான தடையை தளர்த்தியதை அடுத்து, அனைத்து சிறு, குறு விவசாயிகள் மிகுந்த உற்சாகத்துடன் நடவு மற்றும் அறுவடை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு உத்தரவினால் முடங்கி இருந்த குறுகிய கால சாகுபடி பணிகள் உத்வேகத்துடன் நடந்து வருகிறது.
கரோனா வைரஸ் தடுப்பால் கீரை சாகுபடி செய்திருந்த விவசாயிகள் செய்வதறியாது இருந்தனர். இந்நிலையில், வேளாண் பணிகளுக்கான தடையை நீக்கியதால், சாகுபடி செய்திருந்த கீரையை அறுவடை செய்து விற்பனை செய்ய துவங்கி விட்டனர்.
பெரும்பாலான சிறு, குறு விவசாயிகள் உபரி வருமானத்திற்கும், உடனடி வருமானத்திற்கும் ஏற்ற குறுகிய கால சாகுபடியை தேர்ந்தெடுத்து விதைப்பார்கள். குறிப்பாக மாதமாதம் வருவாய் தரக்கூடியது கீரை சாகுபடி என்பதால் அதிக விவசாயிகள் இதில் ஈடுபட்டு இருந்தனர்.
விவசாயிகள் கூறுகையில், விளைநிலத்தில் நாற்றுகளை நடவு செய்து பின் அதிலிருந்து ஒரு மாதம் இடைவெளியில் அறுவடை செய்கிறோம். ஒருமுறை நடவு செய்தால் தொடர்ந்து 20 முறை அறுவடை செய்யமுடியும். மற்ற காய்கறி சாகுபடியுடன் ஒப்பிடுகையில் கீரை சாகுபடி லாபம் தருவதாக உள்ளது என்பதால் நாங்கள் இதனை செய்து வருகிறோம். அறுவடை சமயத்தில் ஊரடங்கு உத்தரவு வந்ததால், கவலையாக இருந்தது. தற்போது, தடை நீங்கியதால் அறுவடை பணியை துவக்கியுள்ளோம். கரோனா வைரஸ் தொற்று இருப்பதால், பணியாளர்கள் அனைவரும் துணியால் முகத்தை கட்டிக்கொண்டு போதிய சமூக இடைவெளியை பின்பற்றி வருகிறோம். காவல்துறையினர் அனுமதித்தால் அதிகாலையிலேயே விற்பனைக்கு சென்று விரைவில் பணமாக்கி, வீடு திரும்பிவிடுவோம் என்றார்.